

சென்னை: வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள ‘முரசு’ புயல், தீவிர புயலாக வலுப்பெற்று இன்று நள்ளிரவில் ஆந்திர கடலோரப் பகுதியில் கரையை கடக்கும். அப்போது அதிகபட்சமாக மணிக்கு 120 கி.மீ. வேகத்தில் பலத்த சூறாவளிக்காற்று வீசக்கூடும். இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய அந்தமான் நிகோபார் தீவுகள் மற்றும் அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது பின்னர் மேலும் வலுவடைந்து வடமேற்கு திசையில் நகர்ந்து நேற்று புயலாக மாறியது.
இந்த புயலுக்கு முரசு என்று பெயரிடப்பட்டுள்ளது. இது மேலும் வலுப்பெற்று தீவிர புயலாக மாறக்கூடும். மேற்கு அல்லது வடமேற்கு திசையில் நகர்ந்து தெற்கு ஆந்திரப் பிரதேச கடலோரப் பகுதிகளுக்கு அருகில் நெல்லூர் மற்றும் நரசாப்பூர் இடையே இன்று நள்ளிரவு அல்லது நாளை அதிகாலை கரையை கடக்கக்கூடும்.
இதன் காரணமாக தமிழகத்தில் இன்று (நவ.2) சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கி.மீ. வேகத்தில்) கூடிய கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, வேலூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரியிலும் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.
3-ம் தேதி நீலகிரி மாவட்டத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய கன அல்லது மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
‘முரசு’ புயல் பெயர் காரணம்: உலக வானிலை நிறுவன அறிவுறுத்தல்படி, வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைப்பதற்காக இந்தியா உள்ளிட்ட 13 நாடுகள் கடந்த 2020-ம் ஆண்டு ஏராளமான பெயர்களை பரிந்துரை செய்திருந்தன. அதன்படி புயல்களுக்கு பெயரிடப்பட்டு வருகின்றன. இதில் இந்திய வானிலை மையம் பரிந்துரை பெய்த தமிழ் பெயர் ‘முரசு’, தற்போது வங்கக்கடலில் உருவாகியுள்ளபுயலுக்கு சூட்டப்பட்டுள்ளது. இப்பெயரை, 2020-ம் ஆண்டு சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநராக இருந்த நா.புவியரசன் இந்திய வானிலை ஆய்வு மையத்துக்கு பரிந்துரை செய்தது குறிப்பிடத்தக்கது.