

சென்னை: பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு விரைவாக நீதி கிடைக்கவும் 26 போக்சோ சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க முதல்வர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுப்பதற்கும், இத்தகைய குற்றங்களில் ஈடுபடுவோர் மீது விரைந்து சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய காலத்தில் நீதி கிடைப்பதை உறுதி செய்வதற்கும் தமிழக அரசு பல்வேறு முன்னெடுப்புகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.
அதன் அடிப்படையில், தமிழகம் முழுவதும் நிலுவையில் உள்ள போக்சோ வழக்குகளின் நிலை குறித்து நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில், போக்சோ வழக்குகளின் விவரம், தற்போதைய நிலை மற்றும் போக்சோ சட்டத்தின் கீழ் பதிவாகும் வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்கென கூடுதலாக தேவைப்படும் நீதிமன்றங்கள் ஆகியவை குறித்து தமிழக முதல்வர் விஜய் விரிவாக கேட்டறிந்தார்.
ஆய்வின் அடிப்படையில், இவ்வழக்குகளின் விசாரணையை விரைவுபடுத்தி, குற்றம் நிரூபிக்கப்படும் நபர்களுக்கு சட்டப்படி உரிய தண்டனை பெற்றுத் தருவதற்கான நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், அனைத்து மாவட்டங்களிலும் போக்சோ நீதிமன்றங்களை அமைப்பதற்குத் தேவையான உடனடி நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் முதல்வர் உத்தரவிட்டார்.
ஏற்கெனவே பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், 2012-ன் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை மட்டும் விசாரிப்பதற்காக, மாநிலத்தில் 22 சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகிறது.
அதனையும், மற்றும் 4 சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பாட்டுக்கு வரும் நிலை ஆகியவற்றையும், நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கையையும் கருத்தில் கொண்டு, முதல்வரின் அறிவுறுத்தலின்படி 12 புதிய சிறப்பு நீதிமன்றங்களும், 14 கூடுதல் சிறப்பு நீதிமன்றங்கள் என மொத்தம் 26 புதிய சிறப்பு நீதிமன்றங்கள் ரூ. 46.59 கோடி செலவில் அமைக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இதன்மூலம், தமிழகத்திலுள்ள 47 காவல் மாவட்டங்களுக்கு மொத்தம் 52 சிறப்பு நீதிமன்றங்கள் அமைய உள்ளன. இதன் மூலம் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம், 2012-ன் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை மட்டும் விரைவாக விசாரித்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், இம்மாதிரியான கொடுமையான குற்றங்கள் மீண்டும் நடைபெறுவதை தடுக்க ஏதுவாக மிக அதிகபட்ச தண்டனையும் குற்றவாளிகளுக்கு பெற்று தருவது உறுதி செய்யப்படும்.
போதைப்பொருள்: அதேபோல், தமிழக அரசின் “போதைப்பொருள் இல்லாத தமிழ்நாடு” இயக்கத்தின் ஒரு பகுதியாக, போதைப்பொருள் கடத்தல், பயன்பாட்டை கட்டுப்படுத்துவதுடன், போதைப்பொருள்கள் மற்றும் மனமயக்கப் பொருள்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்படும் வழக்குகளை உரிய சட்ட நடைமுறைகளை பின்பற்றி விரைந்து விசாரித்து முடிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போது, தமிழகத்தில் 11 சிறப்பு நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், இச்சட்டத்தின் கீழ் நிலுவையில் உள்ள அனைத்து வழக்குகளையும் விரைந்து விசாரித்து முடிக்க வேண்டியதன் அவசியத்தை கருத்தில் கொண்டும், முதல்வரின் உத்தரவின்படியும், காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் வேலூர் ஆகிய 3 இடங்களில் தலா ஒரு சிறப்பு நீதிமன்றமும், சென்னையில் ஒரு கூடுதல் சிறப்பு நீதிமன்றமும் என மொத்தம் 4 புதிய சிறப்பு நீதிமன்றங்களை அமைக்க தமிழக அரசு, அரசானை வெளியிட்டுள்ளது.
இதன் மூலம், நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரித்து முடிப்பதற்கும், நீதித்துறை நடைமுறைகளை மேலும் வலுப்படுத்துவதற்கும், போதைப்பொருள் இல்லாத தமிழகத்தை உருவாக்கும் அரசின் இலக்கை நோக்கி தொடர்ந்து செயல்படுவதற்கும் வழிவகை செய்யப்பட்டுள்ளது என்று தமிழக அரசின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.