

சென்னை: சென்னை மாநகராட்சி நிதி நெருக்கடியில் சிக்கியுள்ளதை அடுத்து, ரூ.600 கோடி மதிப்பிலான புதிய உள்கட்டமைப்பு திட்டங்களுக்கான டெண்டர்களை ரத்து செய்துள்ளது.
தமிழகத்தில் புதிய அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து, மாநகராட்சியின் செலவினங்களை முறைப்படுத்தவும், திட்டமிடலை மேம்படுத்தவும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, நிதி பற்றாக்குறையை சமாளிக்கவும், வருவாயைப் பெருக்கவும் சொத்துவரி மற்றும் தொழில்வரி ஆகியவற்றை முழுமையாக வசூலிக்க மண்டலம் மற்றும் வார்டு வாரியாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. உரிமையாளர்கள் தங்களது வரி நிலுவைகளை உடனடியாக செலுத்தி, சட்ட நடவடிக்கைகளைத் தவிர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
இதற்கிடையே கடந்த வாரம் ரூ.284 கோடி மதிப்பிலான நடைபாதை திட்ட டெண்டர்களை ரத்து செய்த மாநகராட்சி, தற்போது செலவுகளை மேலும் குறைக்கவும், புதிய உள்கட்டமைப்பு திட்டங்களை வகுக்கவும் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட வேளச்சேரி மேம்பாலத் திட்டம் உள்ளிட்ட ரூ.600 முதல் ரூ.700 கோடி வரையிலான டெண்டர்களை ரத்து செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவை மறு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் ரூ.2,000 கோடி வரையில் ஒப்பந்ததாரர்களுக்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை முறைப்படுத்துவதற்கான தீவிர நடவடிக்கைகளில் மாநகராட்சி ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
புதிய டெண்டர்கள்
இதுகுறித்து மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ``அதிக மூலதனம் தேவைப்படும் உள்கட்டமைப்பு திட்டங்கள் மட்டுமே தற்போது நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.
மாநகராட்சியின் நிதி நிலைமை சீரடைந்த பிறகு, இந்தத் திட்டங்கள் அனைத்தும் மறுபரிசீலனை செய்யப்பட்டு மீண்டும் புதிய டெண்டர்கள் கோரப்படும்.
அதே நேரத்தில், பொதுமக்களுக்குப் பயன்படுவதோடு மாநகராட்சிக்கு வருவாய் ஈட்டித் தரும் திட்டங்களான மல்டிலெவல் வாகன நிறுத்துமிடங்கள் போன்ற பணிகள் எந்தவிதத் தடையுமின்றி வழக்கம்போல் தொடர்ந்து நடைபெறும்'' என்று தெரிவித்துள்ளனர்.