‘முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது’ - ஆய்வுக்கு பின் அதிகாரிகள் தகவல்

‘முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது’ - ஆய்வுக்கு பின் அதிகாரிகள் தகவல்
Updated on
1 min read

குமுளி: முல்லைப் பெரியாறு அணையை இன்று ஆய்வு செய்த துணை கண்காணிப்புக் குழுவினர், கசிவுநீர் மிகத்துல்லியமாக உள்ளதால் அணை பலமாக உள்ளது என்று தெரிவித்தனர்.

தேசிய அணைகள் பாதுகாப்பு ஆணையத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முல்லைப் பெரியாறு அணையை கண்காணிப்பதற்காக, தலைவர் அனில் ஜெயின் தலைமையில் மேற்பார்வைக் குழு செயல்பட்டு வருகிறது. இதற்கு உதவியாக, தென் மண்டல இயக்குநர் கிரிதரன் தலைமையில் துணைக் கண்காணிப்புக் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் தமிழகத்தின் சார்பில் பெரியாறு–வைகை வடிநிலக் கோட்ட கண்காணிப்புப் பொறியாளர் சாம் இர்வின், பெரியாறு அணை சிறப்புக் கோட்ட செயற்பொறியாளர் செல்வம் ஆகியோரும், கேரளத்தின் சார்பில் எர்ணாகுளம் மத்திய வட்ட நீர்ப்பாசனப் பிரிவு கண்காணிப்புப் பொறியாளர் ஷைனி ஜோசப், கட்டப்பனை நீர்ப்பாசன துணைப் பிரிவு உதவி நிர்வாகப் பொறியாளர் லெவின்ஸ் பாபு ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

இந்நிலையில், அணையின் நீர்மட்டம் 123 அடியை எட்டியுள்ள நிலையில் இக்குழுவினர் இன்று அணையை ஆய்வு செய்ய வந்தனர். முதற்கட்டமாக பிரதான அணை, சிற்றணை (பேபி அணை), மண் அணை (எர்த் டேம்) உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டனர். பின்பு கேலரி பகுதி, மதகுகளை ஆய்வு செய்தனர்.

மொத்தம் உள்ள 13 மதகுகளில் 3,6-வது மதகை இயக்கி சரிபார்த்தனர். அணையின் கசிவுநீர் நிமிடத்திற்கு 35லிட்டராக இருந்தது. பின்பு குமுளியில் உள்ள கண்காணிப்புக் குழு அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் மாலையில் நடைபெற்றது.

இதில் பேபி அணையைப் பலப்படுத்துவது, வல்லக்கடவு முதல் பெரியாறு அணை வரையிலான பழுதடைந்த சாலைகளைச் சீரமைப்பது உள்ளிட்டவை குறித்து தமிழக அதிகாரிகள் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

பின்பு அதிகாரிகள் கூறுகையில், முல்லைப்பெரியாறு அணையின் கசிவுநீரை ஆய்வுசெய்தபொது, நிமிடத்திற்கு 35.038 லிட்டராக இருந்தது. இது இன்றைய அணையின் நீர்மட்டத்துக்குகு ஏற்ப மிகத்துல்லியமாக இருப்பதால் அணை பலமாக உள்ளது, கூட்டத்தின் முடிவுகள் உயர்நிலைக்குழுவுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றனர்.

‘முல்லை பெரியாறு அணை பலமாக உள்ளது’ - ஆய்வுக்கு பின் அதிகாரிகள் தகவல்
“தமிழை அவமதித்த அமைச்சர் மரிய வில்சன் பேரவையில் மன்னிப்பு கேட்க வேண்டும்” - சீமான்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in