“எனது அட்வைஸை கட்சியிலேயே யாரும் கேட்பதில்லை” - கார்த்தி சிதம்பரம் எம்.பி ஆதங்கம்

கார்த்தி சிதம்பரம்
கார்த்தி சிதம்பரம்
Updated on
2 min read

மதுரை: “தவெக யாரையும் கட்சியில் சேர்த்து கொள்ள வேண்டாம். யாரையும் அனுப்பவும் வேண்டாம். பெரும்பான்மை இருக்கிறது. எனது அட்வைஸை என்னுடைய கட்சியில் யாரும் கேட்பதில்லை. பக்கத்து கட்சியிலா கேட்கப் போகின்றனர்?” என கார்த்தி சிதம்பரம் எம்.பி கூறினார்.

சென்னையில் இருந்து விமான மூலம் மதுரை வந்த சிவகங்கை காங்கிரஸ் எம்.பி கார்த்தி ப.சிதம்பரம் செய்தியாளர்களிடம் கூறியது: “புதிய அரசுக்கு பணியாற்ற போதிய கால அவகாசம் வழங்க வேண்டும். ஆட்சி அமைந்து குறுகிய காலத்தில் ஒவ்வொரு நடவடிக்கையையும் விமர்சிப்பது சரியான அணுகுமுறை அல்ல. பெரும்பாலான அமைச்சர்கள் முதல் முறையாக பொறுப்பேற்றிருப்பதால் நிர்வாகத்தில் நிலைபெற அவகாசம் தேவை. முதல் பட்ஜெட்டுக்குப் பிறகு அரசின் செயல் திட்டம் குறித்து முழுமையாக மதிப்பிட முடியும்.

கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் அதன் பயன் பொது மக்களுக்கு கிடைக்கவேண்டும். தனியார் நிறுவனங்கள் எரிபொருள் விலையை குறைக்க தொடங்கிய நிலையில், அரசு நிறுவனங்களும் அதனை பின்பற்ற வேண்டும்.

ஐந்து ஆண்டுகளில் தவெக ஆட்சி கலையாது. ஆட்சியில் இருப்பவர்கள் கவலைப்படத் தேவையில்லை. யாரையும் கட்சியில் சேர்த்துக் கொள்ள வேண்டாம். யாரும் விட்டு போகப்போவதில்லை. வெளியில் இருப்பவர்கள் ஆட்சியை கவிழ்க்க நினைத்தாலும் வெற்றியடையாது.

திமுக முன்னாள் எம்எல்ஏ எழிலரசனுக்கு தேசிய அரசியல் தெரியவில்லை. ஒரு மாநிலத்தில் காங்கிரஸுக்கு பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம். 3 மாநிலங்களில் முதல்வர் இருக்கின்றனர். உங்களுக்கு எத்தனை முதல்வர் இருக்கின்றனர்? சினிமா பஞ்ச் டயலாக்கில் அரசியல் பண்ணலாம் என நினைக்கின்றனர். ஆக்கப்பூர்வமாக சிந்தித்து பேசவேண்டும்.

நமது நீர் தேவைகளை எந்த அளவிலும் பாதிக்காத அளவிற்குதான் நடவடிக்கை இருக்கவேண்டும். அதற்குதான் காவேரி மேலாண்மை இருக்கிறது. தமிழ்நாட்டில் நீர் பிரச்சினை பொறுத்தவரைக்கும் அனைத்து கட்சிகளும் ஒற்றுமையாக உள்ளது.

காங்கிரஸ் அமைச்சர் விஸ்வநாதன் பற்றி ஆளுநரிடம் கொடுத்த புகார் என்பது தேவையில்லாத சர்ச்சை. ஆளுநருக்கு வைகை ஆற்றை பற்றி ஆய்வு செய்ய அதிகாரம் கிடையாது. பாஜக நியமிக்கப்பட்டுள்ள அனைத்து ஆளுநர்களும், அவர்களுடைய அரசியல் சாசனத்துக்கு, அதிகாரத்துக்கு மேலே செயல்படுகின்றனர்.

ஐந்து ஆண்டுகளுக்கு விஜய் தலைமையில் ஆட்சி நடக்கும். அடுத்த சட்டப்பேரவைத் தேர்தல் 2031-ல் தான் நடக்கும். யாராக இருந்தாலும் பழகிய பிறகுதான் அனுபவம் கிடைக்கும். பட்ஜெட்டுக்குப் பிறகு விமர்சனம் வைப்போம்.

அரசு வழக்கறிஞர் நியமனத்தில் ஊழல் நடந்திருப்பதாக எழும் குற்றச்சாட்டு குறித்து செய்தி படித்தேன். அதுபற்றி தெரியாது. காங்கிரஸ் சார்பில், கொடுக்கப்பட்டுள்ள வழக்கறிஞர்கள் தற்போது வரை நியமனம் செய்யவில்லை என்பது எனக்குத் தெரியும்.

ராமர் கோயிலில் நிறைய ஊழல் நடந்துள்ளது. பாஜக வாய் திறக்க மறுக்கிறது. கோயில் நிர்வாகத்தை தனியார் கையில் கொடுக்க நினைக்கின்றனர். அது பற்றி யாரும் பேச மறுக்கின்றனர். தனியார் மயமானால் இந்து அறநிலையத் துறை அடைத்துவிடலாமா?

அதிமுக தலைமை மீது நம்பிக்கை இல்லாமல் சிலர் விலகி வருகின்றனர். நீண்ட நாள் நீடிக்கக் கூடிய தலைவராக தற்போது விஜய் இருக்கும் சூழலில் சூழலில் வருகின்றனர்.

அதிமுக கட்சி இருக்கவேண்டும். அடித்தட்டு மக்களின் உணர்வுகளை புரியும் கட்சியான அதிமுக அழிவது எனக்கு சரியாகப்படவில்லை. ஜனநாயகத்துக்கும் சரியல்ல.

என்னைக் கேட்டால் யாரையும் தவெக சேர்த்து கொள்ள வேண்டாம். யாரையும் அனுப்ப வேண்டாம். பெரும்பான்மை இருக்கிறது. எனது அட்வைஸை என்னுடைய கட்சியிலேயே யாரும் கேட்பதில்லை. பக்கத்து கட்சியிலா கேட்கப் போகின்றனர்?

ராஜினாமா செய்து தவெகவுக்கு வருபவர்களை சேர்த்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை. அந்த தொகுதி வாக்காளர்கள் பற்றி சிந்திக்க வேண்டும். எதற்காக ராஜினாமா செய்கிறார்கள் என சிந்திக்க வேண்டும். காங்கிரஸ் புதிய தலைவருக்கு வாழ்த்துகள்” என்று அவர் கூறினார்.

கார்த்தி சிதம்பரம்
“ராஜ்மோகன் தனியார் பள்ளிகளுக்கு மட்டும்தான் அமைச்சரா?” - சீமான் கேள்வி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in