

நவாஸ்கனி எம்.பி
புதுடெல்லி: நாடாளுமன்ற எம்பிக்களின் தொகுதி வளர்ச்சி நிதியை உயர்த்தி தர வேண்டும் என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் எம்பியான கே.நவாஸ்கனி வலியுறுத்தி உள்ளார். மக்களவையின் நிதி மசோதாவில் பங்கேற்று பேசிய அவர், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்தார்.
இது குறித்து நாடாளுமன்ற மக்களவையில் ராமநாதபுரம் தொகுதி எம்பியான கே.நவாஸ்கனி பேசியது: “அடுக்கடுக்கான வரிகளுக்கும், உயர்ந்து வரும் விலைவாசி, கடும் பொருளாதார நெருக்கடியில் பொது மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.
இந்நிலையில் அடித்தட்டு மற்றும் நடுத்தர மக்களுக்கு நேரடியாக எந்தப் பயனும் இல்லாத நிதி மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது. இது, வசதியானவர்களுக்கு சலுகைகள் வழங்குவதற்கு எந்த அளவு முன்னுரிமை அளிக்கப்பட்டிருக்கிறதோ, அதே அளவு நடுத்தர மக்களின் சுமையை அதிகரித்துள்ளது.
இந்த நிதிநிலை அறிக்கை, சாமானிய மக்களுக்கும், உங்களுக்கு வாக்களித்த பொதுமக்களுக்கும் கூடுதல் சுமையை ஏற்படுத்தியுள்ளது. இவற்றை சரிசெய்ய நீண்ட காலமாக நாடாளுமன்ற எம்பிக்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்த வேண்டும். ஆறு சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய ஒரு நாடாளுமன்றத் தொகுதிக்கு ஐந்து கோடி ரூபாய் நிதி வழங்கப்படுகிறது. அதில் 18 சதவீதம் ஜிஎஸ்டி பிடித்தம் செய்யப்படுகிறது. இதன் மதிப்பு சுமார் ரூ.90 லட்சம்.
இந்த நிதி என்பது ஆறு சட்டமன்ற தொகுதிகளுக்கான தேவைகளில் 10 சதவீதத்தைக் கூட பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது. ஆகவே, அந்த தொகுதி மேம்பாட்டு நிதியை உயர்த்தவும், அதற்கு விதிக்கப்பட்டுள்ள ஜிஎஸ்டியை ரத்து செய்யவும் கேட்டுக்கொள்கிறேன். என்னுடைய தொகுதியானது நீண்ட கடற்கரை பகுதியை கொண்டுள்ளது. அங்கு அதிக அளவில் மீனவர்கள் வாழ்ந்து வருகின்றனர். மீனவர்கள் அண்டை நாட்டு கடற்படைக்கு அஞ்சியும் இயற்கை சீற்றத்திற்கு அஞ்சியும் கடலுக்குள் தங்கள் வாழ்வாதாரத்தை நடத்துகின்ன்றனர்.
அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தொடர்ந்து இந்த அவையில் வலியுறுத்தி வருகிறேன். அவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் சூழலில், தமிழக அரசு வழங்கும் உதவிகளைப் போல மத்திய அரசும் வழங்க வேண்டும்.இலங்கை கடற்படையால் இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும்போது, அவர்களின் படகுகள் பறிமுதல் செய்யப்படும்போது, தமிழக அரசு நிவாரணம் வழங்குகிறது.
ஆனால், மத்திய அரசு இதுவரை ஒரு ரூபாய் கூட எந்த உதவியும் வழங்கவில்லை. அதேபோல், கடலில் ஏற்படும் இயற்கை சீற்றங்களால் மீனவர்கள் காணாமல் போகும் சூழலில், உடனடியாக தேடுதல் பணிக்காக கடற்படையுடன் சேர்த்து கூடுதல் ஹெலிகாப்டர்கள் அனுப்பப்பட வேண்டும். அதற்கான உத்தரவுகள் உடனடியாக வழங்கப்பட வேண்டும். இவ்வாறு மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன். ராமநாதபுரம் மாவட்டத்தில் மத்திய அரசின் நிதி பங்களிப்பில் தொழில் நிறுவனங்களை உருவாக்கி வேலை வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.
அங்கு இருக்கக்கூடிய தொழில் நிறுவனங்கள் ராமநாதபுரம் மாவட்டம் கமுதக்குடியில், தேசிய நெசவுத் தொழில் கழகத்தின் கீழ் இயங்கும் நூற்பாலை மேம்படுத்தப்பட்டு, மேலும் பலருக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்பட வேண்டும். கடந்த காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் மக்கள் நேரடியாக பயன்பெறக்கூடிய திட்டம் கொண்டுவரப்பட்டது. குறிப்பாக கிராமப்புற மக்களுக்கு பயன்படும் வகையில் நூறு நாள் வேலைவாய்ப்பு திட்டம், உணவு உத்தரவாத திட்டம், தகவல் அறியும் உரிமைச் சட்டம் போன்ற பல முக்கிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.அதேபோன்று ஏதாவது ஒரு திட்டத்தை இந்த அரசு கொண்டு வந்திருக்கிறதா?
கொண்டு வருவதற்கான முயற்சிகளை இந்த அரசு மேற்கொண்டு இருக்கிறதா? மத அரசியல், மொழி அரசியலை முன்னிறுத்துவதை தவிர்த்து ஏழை எளிய மக்களுக்கு வாழ்வாதாரத்தை முன்னேற்றுவதற்காக இந்த அரசு எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை. ஏறத்தாழ 53.47 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பட்ஜெட்டை நீங்கள் கொண்டு வந்திருந்தாலும், ஏழை எளிய மற்றும் விவசாய மக்கள், நடுத்தர மக்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்கள் இதில் இடம்பெறாதது வருத்தமளிக்கிறது.
பிஎம்என்ஆர்எப் திட்டத்தின் கீழ் இருதய சிகிச்சை மற்றும் புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களுக்கு ரூ.3 லட்சம் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த திட்டத்தில் ஆண்டுக்கு 30 பேருக்கு மட்டும் தான் இந்த உதவி கிடைக்கிறது. விண்ணப்பிப்போர் அதிகமாக இருப்பதால், அவர்களுக்கு எங்களால் கொடுக்க முடியாமல் இருக்கிறது. எனவே, இந்தத் திட்டத்தின் வரம்பை உயர்த்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நீங்கள் ரஷ்யாவிலிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதால் 30 சதவிகிதம் குறைந்த விலையில் எரிபொருள் கிடைப்பதாக கூறினீர்கள். அமெரிக்காவின் எதிர்ப்பையும் மீறி அங்கே வாங்கினீர்கள்.
அதனால் கோபம் கொண்ட அமெரிக்கா இந்தியாவினுடைய ஏற்றுமதி பொருள்களுக்கு எல்லாம் கூடுதல் வரியை விதித்து, இங்கு உள்ள ஏற்றுமதியாளர்கள் எல்லாம் பெரும் பாதிப்பை அடைந்தார்கள். இங்கு உள்ள ஏற்றுமதி தொழில்கள் எல்லாம் சிதைந்து போனது.
ஆனால் அப்போதும் கூட இந்த 30 சதவிகித லாபம் தனியார் எண்ணெய் நிறுவனங்களுக்கு தான் கிடைத்ததை தவிர, நாட்டு மக்களுக்கு அதில் ஒரு 10 சதவீதமாவது பெட்ரோல் டீசல் விலையை குறைத்து இருந்தால் ஒட்டுமொத்த நாட்டு மக்களும் இன்று உங்களை பாராட்டியிருப்பார்கள். நிதிநிலை அறிக்கை என்பது சாமானிய கடைக்கோடி மக்களுக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும், இந்த நிதிநிலை அறிக்கை என்பது நிதிநிலை அறிக்கையாக இல்லை,மக்களுடைய கொதி நிலை அறிக்கையாக இருக்கின்றது” என்று அவர் பேசினார்.