

சென்னை: “தமது சொந்தக் கட்சிக்காரர்களிடம் இருந்து பெண்களைப் பாதுகாக்க முடியாத முதல்வர், மற்ற குற்றவாளிகளைக் கட்டுப்படுத்தி தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கை எப்படி சீராக்குவார்?” என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “சென்னை திருமங்கலத்தில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகத் திமுக வழக்கறிஞர் பிரிவு பகுதி அமைப்பாளரான பரத் என்பவர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டிருப்பது, அறிவாலயத்தின் அழுக்கு மணிமகுடத்தின் மீது பதிக்கப்பட்ட மற்றுமொரு கரும்புள்ளி.
பாலியல் குற்றவாளிகள், போதைப்பொருள் கடத்தல் மன்னர்களை எல்லாம் கட்சி நிர்வாகிகளாக அமர்த்தி அழகு பார்க்கும் கேவலப்பட்ட ஒரே கட்சி திமுகதான் என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று வேண்டும்?
ஆட்சி அதிகாரம் கையில் இருக்கும் மமதையில் தான்தோன்றித்தனமாகத் திரியும் தமது சொந்தக் கட்சிக்காரர்களிடம் இருந்து பெண்களைப் பாதுகாக்க முடியாத முதல்வர், மற்ற குற்றவாளிகளைக் கட்டுப்படுத்தி தமிழகத்தின் சட்டம் - ஒழுங்கை எப்படி சீராக்குவார்?
மேடைக்கு மேடை பெண்களைக் கேவலமாகப் பேசுபவர்களை நட்சத்திரப் பேச்சாளர்களாகவும், அதிகாரமிக்க அமைச்சர்களாகவும் கொண்டாடும் திமுக, தமிழகத்தில் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நம் பெண்கள் நிம்மதியாக வெளியே தலைகாட்ட முடியுமா?
குழந்தைகள் முதல் முதியவர்கள் வரையுள்ள அனைத்துப் பெண்களையும் கொஞ்சம் கூட ஈவு இரக்கமின்றி, பாலியல் ரீதியாக வேட்டையாடும் மிருகங்களுக்குத் தீனி போட்டு வளர்த்துக் கொண்டிருக்கும் திமுக எனும் தீயசக்தியை வேரோடு அழித்து, சுவடு தெரியாமல் புதைக்கும் வரை தமிழகப் பெண்கள் ஓயமாட்டார்கள்.
மீண்டும் ஆட்சியைப் பிடிக்கலாம், இஷ்டம்போல பெண்களை வதைக்கலாம் என்ற கனவில் மிதக்கும் திமுக உடன்பிறப்புகளின் பேராசைக்கு இன்னும் சில வாரங்களில் முடிவு கட்டப்படும்!” என்று அவர் தெரிவித்துள்ளார்.