

கரூர்: “நீட் போட்டித் தேர்வு பயிற்சி என்பது ஊழல் தொழிற்சாலையாக மாறியுள்ளது. பயிற்சி, புத்தகங்கள் என 22 லட்சம் மாணவர்களால் ரூ.1.32 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசின் கல்விக்கான பட்ஜெட்டே நிதியே ரூ.1.04 லட்சம் கோடி தான்,” என காங்கிரஸ் எம்.பி. செ.ஜோதிமணி குற்றஞ்சாட்டியுள்ளார்.
கரூர் எம்.பி. அலுவலகத்தில் எம்.பி. செ.ஜோதிமணி இன்று செய்தியாளர்களிடம் கூறிய: “நாடு முழுவதும் அண்மைக் காலமாக தேர்வுகளில் நடைபெறும் ஊழலுக்கு எதிரான போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இப்பேரணிகளில் ஜென் ஸி தலைமுறையினர் அதிகளவில் பங்கேற்று அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
பிளஸ் 2 தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு மீண்டும் ஒரு தேர்வு வைப்பது அநீதி. தமிழகத்தில் அனிதா உள்ளிட்ட நாடு முழுவதும் 50, 60 மாணவர்கள் நீட் தேர்வால் உயிரிழந்துள்ளனர். சாதாரண ஏழை, எளிய மக்கள் நீட் பயிற்சி தேர்வுக்கு எப்படி தயாராக முடியும்.
நீட் போட்டித் தேர்வு பயிற்சி என்பது ஊழல் தொழிற்சாலையாக மாறியுள்ளது. பயிற்சி, புத்தகங்கள் என 22 லட்சம் மாணவர்களால் ரூ.1.32 லட்சம் கோடி செலவிடப்பட்டுள்ளது. ஆனால் மத்திய அரசின் கல்விக்கான பட்ஜெட்டே நிதியே ரூ.1.04 லட்சம் கோடி தான்.
இதிலிருந்து இதில் நடக்கும் ஊழலை புரிந்து கொள்ளமுடியும். வினாத்தாள் கசிவு, மறுதேர்வு, தேர்வு மையம் மாற்றம் என பல்வேறு ஊழல் நடைபெறுகிறது. இதற்காக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலக மறுக்கிறார்.
நீட் தேர்வு இல்லாமல், ஜேஇஇ, மத்திய அரசு பணிகளுக்கான எஸ்எஸ்சி, ரயில்வே உள்ளிட்ட பல்வேறு தேர்வுகளை நடத்தி வருகின்றன. இவற்றிற்காக ஆண்டுக்கு ரூ.3.05 லட்சம் கோடி செலவிடப்படுகிறது. இது மத்திய அரசின் பல்வேறு துறைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை விட அதிகம். மக்கள் எப்படி சுரண்டப்படுகின்றனர்.
ஒரு நல்ல வேலைக்காக மக்கள் போராடி வருகின்றனர். கல்வி பயிலும் 1,000 இளைஞர்களின் 12 பேருக்கு மட்டுமே நல்ல நிரந்தர வேலை கிடைகிறது. 612 பேர் முறைசாரா பணிகள், தொழில்களில் ஈடுபடுகின்றனர். 292 பேர் எந்த வேலையுமின்றி உள்ளனர். பொறியியல் பட்டதாரிகள் 80 சதவீதம் பேர் வேலையின்றி உள்ளனர். 40, 50 ஆண்டுகளில் இல்லாத வேலையில்லா திண்டாட்டம் தற்போது ஏற்பட்டுள்ளது.
நீட் தேர்வு, வேலைகளுக்கான போட்டி தேர்வுகளில் பல லட்சம் கோடி ஊழல் நடைபெறுகிறது. மாணவர்கள் தெருவில் இறங்கி போராடி வருகின்றனர். நீட் தேர்வுக்கு எதிராக தமிழகம் பல ஆண்டுகளாக போராடி வருகிறது. இதற்கான போராட்டங்களை காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி முன்னெடுத்து வருகிறார். ஊழலுக்கு எதிரான போராட் டங்களுக்கு மகத்தான ஆதரவு கிடைத்துள்ளது.
ராஜஸ்தான் மாநிலம், கோட்டாவில் பல்வேறு போட்டித் தேர்வுக்கான மையங்கள் அமைந்துள்ளன. அங்கு இதற்கு எதிரான பேரணி நடத்தப்பட்டது. தொடர்ந்து டெல்லி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பேரணிகள் நடைபெற உள்ளது. ஜென்ஸி தலைமுறை இளைஞர்கள் அணி திரண்டு பங்கேற்க வேண்டும்.
இதற்காக காங்கிரஸ் கட்சி சார்பில் க்யூ ஆர் கோடுடன் விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றை ஸ்கேன் செய்து இளைஞர்கள், மாணவர்கள் போராட்டத்தில் இணையலாம்” என்று அவர் கூறினார்.