

திரைப்பட இயக்குநர் மோகன் ஜி | கோப்புப் படம்
கும்பகோணம்: “மகாமக விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொள்வதாக கூறப்படும் நிலையில், தனி அதிகாரியை நியமிக்க வேண்டும்” என தமிழக அரசுக்கு திரைப்பட இயக்குநர் மோகன் ஜி வலியுறுத்தியுள்ளார்.
கும்பகோணம் வட்டம் உடையாளூரில் ராஜராஜ சோழன் சமாது என்று அழைக்கப்படும் இடத்தில் உள்ள சிவலிங்கத்தை திரைப்பட இயக்குநர் மோகன் ஜி இன்று தரிசனம் செய்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ராஜராஜ சோழன் சமாது என்று அழைக்கப்படும் கும்பகோணம் வட்டம் உடையாளூரில் உள்ள இடத்தை கடந்த 2019-ம் ஆண்டு தமிழக தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொண்டனர். அதன் பிறகு என்ன முடிவு என்று தெரியவில்லை. கடந்த 8 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்த வரும் நிலையில் தமிழக அரசு ராஜராஜ சோழனுக்கு, அந்த இடத்தில் மணி மண்டபம் கட்டி, அரசு விழாவாக நடத்த வேண்டும்.
நாங்கள் பல ஆண்டுகளாக விடுத்து வரும் கோரிக்கைக்கு கடந்த திமுக ஆட்சி செவிசாய்க்கவில்லை, தற்போது ஆட்சிப் பொறுப்பு ஏற்றுள்ள தமிழக வெற்றிக் கழக அரசு அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். உலகமே போற்றக்கூடிய ராஜராஜ சோழன் என்ற பேரரசனுக்கு, அந்த இடம் தான் பள்ளிப்படை என்ன உறுதிப்படுத்தி மணிமண்டபம் கட்ட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளோம். இதேபோல் தமிழகம் முழுவதும் உள்ள சிவாலயங்களில் தன்னெழுச்சியாக ராஜராஜ சோழனின் பிறந்த நாளை சதய விழாவாக கொண்டாட வேண்டும்.
2028 மார்ச் 9-ம் தேதி மகாமக விழா நடைபெறுவதை ஒட்டி, 12 சைவ, 5 கோயில்களில் ஒரு கோயில் மட்டும் கும்பாபிஷேகம் முடிந்துள்ளது. மீதமுள்ள கோயில்களில் கும்பாபிஷேகம் செய்ய 16 மாதங்கள் உள்ள நிலையில் புதிதாக வந்த ஆட்சியாளர்கள் கவனக்குறைவாக கண்டுகொள்ளாமல் உள்ளனர்.
இந்த விழாவுக்கு சுமார் 1 கோடி பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படும் நிலையில் தமிழக அரசு, அறநிலையத் துறை துரிதமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பக்தருக்கு வேண்டிய அனைத்து அடிப்படை வசதிகளும் செய்து தர வேண்டும்.
இந்த விழாவில் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோர் கலந்து கொள்வதாகக் கூறப்படும் நிலையில் தமிழக அரசு மெத்தனமாக இருப்பது வருத்தத்தை அளிக்கிறது. எனவே தமிழக அரசு, கடந்த மகாமக விழாவின் போது ஏற்பட்ட விபத்தை கருத்தில் கொண்டு அந்த விழாவுக்கு என தனி அதிகாரி நியமித்து பணிகளை விரைவுபடுத்த வேண்டும்.
சபரிமலை அய்யப்பன் கோயிலுக்கு தமிழகத்திலிருந்து செல்லும் பக்தர்களுக்கு உரிய வசதிகளையும், டோல்கேட்டுகளில் கட்டணமில்லாமல் பயணிக்கவும் தமிழக அரசு சார்பில் மத்திய அரசிடம் வலியுறுத்த வேண்டும்” என்று இயக்குநர் மோகன் ஜி கூறினார்.