

வீராங்கனைகள் மனிஷா ராமதாஸ் (மேல் இடது), நித்ய ஸ்ரீ (கீழ் இடது); முதல்வர் விஜய் (வலது)
சென்னை: “பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கங்களை வென்ற தமிழக வீராங்களைகள் மனிஷா ராமதாஸ் மற்றும் நித்ய ஶ்ரீ ஆகியோருக்கு பரிசுத் தொகை அறிவித்து முதல்வர் விஜய் பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது குறித்து முதல்வர் விஜய் வெளியிட்டுள்ள சமூக வலைதள பதிவுகளில், “ஜப்பானில் நடைபெற்று வரும் 5-வது பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் விளையாட்டில் கலப்பு இரட்டையர் SL3 - SU5 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம்பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை மனிஷா ராமதாஸுக்கும் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும், வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
வீராங்கனை மனிஷா ராமதாஸின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழக அரசு சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். விடாமுயற்சி மற்றும் கடின உழைப்பால் இச்சாதனையைப் படைத்துள்ள வீராங்கனை மனிஷா ராமதாஸின் வெற்றி இளம் தலைமுறை பாரா விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்குப் புதிய நம்பிக்கையை அளிக்கும்.
அவர், எதிர்காலத்திலும் பல வெற்றிகளைப் பெற்று தமிழ்நாட்டிற்கும், இந்தியாவுக்கும் பெருமை சேர்க்க வாழ்த்துகள்” என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார்.
மற்றொரு பதிவில், பாரா ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பேட்மிண்டன் விளையாட்டில் கலப்பு இரட்டையர் SH6 பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய அணிக்கும், அவ்வணியில் இடம் பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த வீராங்கனை நித்ய ஶ்ரீக்கு மனமார்ந்த வாழ்த்துகள் மற்றும் பாராட்டுகள்.
வீராங்கனை நித்ய ஶ்ரீயின் சாதனையைப் பாராட்டும் வகையில், தமிழக அரசு சார்பில் ரூ.30 லட்சம் உயரிய ஊக்கத்தொகை வழங்கப்படும். வீராங்கனை நித்ய ஶ்ரீ, வருங்காலங்களிலும் வெற்றிகளைப் பெற்று, மேலும் பல புதிய உயரங்களைத் எட்ட வாழ்த்துகிறேன்.” என்று முதல்வர் விஜய் கூறியுள்ளார்.