

சென்னை: ஓமந்தூரார் அரசு மருத்துவமனை நுழைவாயில் கான்கிரீட் இடிந்து விழுந்த விபத்தில், தாய் மற்றும் அவரது 7 வயது மகள் படுகாயமடைந்தனர்.
சென்னை, நீலாங்கரை பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (59). இவர் நுரையீரல் பாதிப்பால், கடந்த 15-ம் தேதி சிகிச்சைக்காக ஓமந்தூரார் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு ராமசாமியை பார்ப்பதற்காக அவருடைய மகள் சத்யா (37) தனது 7 வயது மகள் ஷிவானியுடன் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு வந்தார்.
அவர்கள் மருத்துவமனை வளாகத்தின் நுழைவாயில் வழியே நடந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக மேலிருந்த கான்கிரீட் கூரையின் ஒரு பகுதி பெயர்ந்து அவர்கள் தலையில் விழுந்தது.
இதில் சத்யா, சிறுமி ஷிவானி இருவரும் பலத்த காயம் அடைந்தனர். கான்கிரீட் தலையில் விழுந்த அதிர்ச்சியில், சத்யா சம்பவ இடத்திலேயே மயங்கினார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள், காயமடைந்த தாய் மற்றும் மகளை மீட்டு ஓமந்தூரார் மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக சேர்த்தனர்.
படுகாயமடைந்த சத்யாவுக்கு தலையில் 7 தையல்கள் போடப்பட்டுள்ளன. சிறுமி ஷிவானிக்கு தலையில் பலத்த அடிபட்டதில் ரத்தக்கசிவு ஏற்பட்டதையடுத்து, அவர் மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதுகுறித்து, திருவல்லிக்கேணி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.