தமிழகத்தில் 97.28 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் - எஸ்ஐஆர் மீது இந்திய கம்யூ. சந்தேகம்

தமிழகத்தில் 97.28 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் - எஸ்ஐஆர் மீது இந்திய கம்யூ. சந்தேகம்
Updated on
1 min read

சென்னை: “தமிழகத்தில் 97 லட்சத்து 28 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளனர். சிறப்புத் தீவிர திருத்த முறையில் பெரிய தவறு நடக்குமோ என்ற ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது” என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் கூறியுள்ளார்.

இது குறித்து இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், “இந்தியத் தேர்தல் ஆணையம் கடந்த அக்டோபர் 27-ஆம் தேதி அறிவித்த வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கை நிறைவடைந்து, இன்று (டிச.19) வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. முந்தைய வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிடும்போது, 97 லட்சத்து 28 ஆயிரம் வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்காமல் நீக்கப்பட்டுள்ளனர்.

சிறப்பு தீவிர திருத்தம் விடுபட்ட வாக்காளர் எண்ணிக்கை அதிர்ச்சி அளிக்கிறது. இதில் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் என்கிற முறையில் 66 லட்சத்துக்கும் அதிகமானோர் நீக்கப்பட்டுள்ளனர். இது நீக்கப்பட்ட வாக்காளர்களில் 68 சதவீதமாக இருக்கிறது. நீக்கம் செய்யப்பட்டவர்கள் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் என்பதை எந்த அடிப்படையில் உறுதி செய்யப்பட்டது என்பதை தேர்தல் ஆணையம் விளக்க வேண்டும்.

நீக்கம் செய்யப்பட்ட வாக்காளர்கள் மீண்டும் பெயரை சேர்க்க வேண்டும் என்ற உரிமை கோரி முறையிடும்போது, அதனை ஏற்று, வாக்காளர் பட்டியலில் அவரது பெயரை சேர்க்க ஆணையம் உறுதியளிக்க வேண்டும்.

ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் பெயர் இடம் பெற்றிருந்த வகையில் 3.98 லட்சம் பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் குறிப்பிட்ட ஒரு தொகுதியில், குறிப்பிட்ட வாக்கு சாவடியில் மட்டும் அவரது பெயரை சேர்த்து, கூடுதலாக இடம் பெற்றுள்ள பகுதியில் நீக்கம் செய்யாமல், மொத்தமாக நீக்கம் செய்தது ஏன்? என்ற வினா எழுகிறது.

நாடாளுமன்ற ஜனநாயகத்தின் உயிர்நாடி, வாக்காளர்கள் என்பதை கருத்தில் கொண்டு, இறந்தவர்கள் தவிர, உயிருடன் வாழ்ந்து வரும், எவர் ஒருவர் பெயரும் மறுக்கப்படாமல் வாக்காளர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்பதில் தேர்தல் ஆணையம் கூடுதல் அக்கறையும், முனைப்பும் காட்ட வேண்டும்.

ஒன்றிய அரசின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும், பாஜக, ஆர்எஸ்எஸ் தலைவர்களும் பேசி வரும் செய்தி, சிறப்புத் தீவிர திருத்த முறையில் பெரிய தவறு நடக்குமோ என்ற ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தலைமைத் தேர்தல் ஆணையர் வெளியிடும் தகவல்களும், தேர்தல் ஆணையம் மீதான சந்தேக நிழலை விலக்க முடியவில்லை.

ஜனநாயகத்தில் இறுதி எஜமானர்கள் வாக்காளர்களும், குடி மக்களும் என்கிற முறையில் எச்சரிக்கையாக இருந்து, சதிகளை முறியடித்து, ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதில் தேர்தல் ஆணையம் வெளிப்படையாக நடந்து கொள்ள வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது” என்று அவர் கூறியுள்ளார்

தமிழகத்தில் 97.28 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் - எஸ்ஐஆர் மீது இந்திய கம்யூ. சந்தேகம்
SIR | திருச்சி மாவட்டத்தில் 3.31 லட்சம் வாக்காளர்கள் நீக்கம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in