வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் மீதான பணப்பரிமாற்ற வழக்கை விசாரணைக்கு பட்டியலிட்டது ஐகோர்ட்

வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் மீதான பணப்பரிமாற்ற வழக்கை விசாரணைக்கு பட்டியலிட்டது ஐகோர்ட்
Updated on
1 min read

சென்னை: அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, விஜயபாஸ்கர் உள்ளிட்டோர் மீது சட்டவிரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய அமலாக்கத் துறைக்கு உத்தரவிடக் கோரி திமுக எம்பி கிரிராஜன் தாக்கல் செய்திருந்த வழக்குகள், சென்னை உயர் நீதிமன்றத்தில் திங்கட்கிழமையன்று விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

திமுக மாநிலங்களவை உறுப்பினர் இரா.கிரிராஜன், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி , சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.காமராஜ், கே.சி.வீரமணி, கே.பி.அன்பழகன், அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமியின் உறவினர் சேலம் இளங்கோவன், அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா ஆகியோருக்கு எதிராக, சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்குகளை தாக்கல் செய்திருந்தார்.

அந்த வழக்குகளில், அமைச்சராக இருந்த வேலுமணி, சாலைகள் அமைத்தது, எல்.இ.டி விளக்குகள் வாங்கியதில் முறைகேடுகள் செய்ததாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாகவும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, அன்பழகன், சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர், காமராஜ், வீரமணி, அதிமுக முன்னாள் எம்எல்ஏ சத்யா, சேலம் இளங்கோவன் ஆகியோருக்கு எதிராக வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்குகள் விசாரணையில் உள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறையால் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறை வழக்கு பதிவு செய்ய முகாந்திரம் உள்ளதால், லஞ்ச ஒழிப்புத்துறை சேகரித்துள்ள ஆவணங்கள் அடிப்படையில், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீது, வழக்கு பதிவு செய்து விசாரிக்கும்படி அமலாக்கத் துறைக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்குகள், தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டுள்ளன.

வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் மீதான பணப்பரிமாற்ற வழக்கை விசாரணைக்கு பட்டியலிட்டது ஐகோர்ட்
“உதயநிதியை ஒருபோதும் முதல்வர் வேட்பாளராக மக்கள் ஏற்க மாட்டார்கள்” - பியூஷ் கோயல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in