செம்மண் முறைகேடு விவகாரம்: முன்னாள் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான அமலாக்கத் துறை வழக்கு ரத்து

பொன்முடி | கோப்புப் படம்.

பொன்முடி | கோப்புப் படம்.

Updated on: 
1 min read

சென்னை: செம்மண் முறைகேடு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோருக்கு எதிரான அமலாக்கத் துறையின் சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடை சட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2006 - 2011ம் ஆண்டு வரையிலான திமுக ஆட்சியில் உயர்கல்வி மற்றும் கனிம வளங்கள், சுரங்கத்துறை அமைச்சராக க.பொன்முடி பதவி வகித்தபோது, விழுப்புரம் மாவட்டத்தில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிகளவில் செம்மண் வெட்டி எடுத்ததன் மூலம், அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பு ஏற்படுத்தியதாக லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு செய்திருந்தது.

பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி, உறவினர் ராஜமகேந்திரன் உள்ளிட்டோர் மீதான இந்த வழக்கை விசாரித்த விழுப்புரம் மாவட்ட நீதிமன்றம், குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் விடுதலை செய்து, கடந்த ஏப்ரல் மாதம் தீர்ப்பளித்தது.

முன்னதாக, செம்மண் முறைகேடு தொடர்பாக கிடைத்த பெருந்தொகை ஹவாலா பரிவர்த்தனை மூலம் வெளிநாடுகளில் உள்ள நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாகக் கூறி, அமைச்சர் பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோருக்கு எதிராக, சட்டவிரோத பணப்பரிமாற்றத் தடைச் சட்டத்தின் கீழ் அமலாக்கத் துறையினர் வழக்குப்பதிவு செய்திருந்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக, 2023-ம் ஆண்டு சென்னை சிபிஐ நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி பொன்முடி, அவரது மகன் கவுதம சிகாமணி உள்ளிட்டோர் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அந்த மனுக்களில், மூல வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டு விட்டதால், சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச் சட்ட வழக்கை தொடர்ந்து விசாரிக்க முடியாது என்பதால், அமலாக்கத் துறை வழக்கை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கை விசாரித்த, தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வு, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி மூல வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட பொன்முடி உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டுள்ளதால், அமலாக்கத் துறை வழக்கை தொடர அனுமதிக்க முடியாது எனக்கூறி, வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டது.

<div class="paragraphs"><p>பொன்முடி | கோப்புப் படம்.</p></div>
“யூனிட் ரூ.35 மின் ஒப்பந்தத்தில் மெகா ஊழல்” - தவெக அரசு மீது பழனிசாமி குற்றச்சாட்டு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in