

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தொகுதிகள் மற்றும் வேட்பாளர் தேர்வில் மிகப்பெரிய அளவில் முறைகேடு நடந்திருப்பதாக காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி எடுத்து வீசிய குண்டு, காங்கிரஸ் வட்டாரத்தில் கலகத்தை வெடிக்க வைத்திருக்கிறது.
திமுக கூட்டணியில் 28 தொகுதிகளில் போட்டியிட்டது காங்கிரஸ். இதில் 13 தொகுதிகளில் சிட்டிங் எம்எல்ஏக்களே களம் கண்டதால் அங்கெல்லாம் சிக்கல் இல்லை. எஞ்சிய 15-ல்தான் இஷ்டத்துக்கு ‘எல்லா’ அத்துமீறல்களும் நடந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.
இதுகுறித்து நம்மிடம் பேசிய தமிழக காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர், “வேட்பாளர்களை தேர்வு செய்துவிட்டு தொகுதிகளைத் தேடினார்கள் என்ற ஜோதிமணியின் கூற்று முற்றிலும் உண்மை. தனது கரூர் மக்களவைத் தொகுதியில் ஏதாவது ஒரு சட்டப்பேரவைத் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிட வேண்டும் என வலியுறுத்தினார் ஜோதிமணி.
ஆனால், அவரது கோரிக்கையை நிராகரித்துவிட்டார்கள். வேட்பாளர் தேர்வு தொடர்பாக நான்கு நாட்கள் ஸ்கிரீனிங் கமிட்டி மீட்டிங் ஸூம் வழியே நடந்தது. அப்போது, “காங்கிரஸ் கட்சியில் அருந்ததியருக்கு ஏன் வாய்ப்பு அளிப்பதே இல்லை?” என்று கேள்வி எழுப்பினார் ஜோதிமணி. மேலும், காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் எவை என்றும் கேட்டார். ஆனால், “அதையெல்லாம் இப்போது சொல்லமுடியாது” என்று பதில் சொன்னார் செல்வப்பெருந்தகை. இதை ஜீரணிக்க முடியாமல் பாதியிலேயே எழுந்து போய்விட்டார் ஜோதிமணி.
மாநில எல்லையில் இருக்கும் தனித் தொகுதி ஒன்றில் பிரபல இருசக்கர வாகன கம்பெனி ஒன்று தனது உற்பத்தி யூனிட்டை திறக்கப் போகிறது. அவர்கள் அங்கு தொழிலாளர் பிரச்சினைகள் வந்தால் அதை சமாளிக்கும் வகையில் தங்களுக்குத் தோதான ஒருவரை எம்எல்ஏவாக வைத்துக் கொள்ள நினைக்கிறார்கள்.
அப்படியான ஒரு நபரை அவர்களே தேர்வு செய்து அவருக்கு சீட் கொடுப்பதற்காக காங்கிரஸ் கட்சியின் முக்கிய தலை ஒருவருக்கு ரூ. 4 கோடி கைமாற்றி விடுகிறார்கள். தேர்தல் செலவையும் தாங்களே பார்த்துக் கொள்வதாகவும் சொன்னதால் அவர்கள் சொன்ன நபருக்கே சீட்டை ஒதுக்கினார்கள்.
துறையூர் (தனி) தொகுதியில் நிறுத்தப்பட்ட அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் செயலாளர் விச்சு லெனின் பிரசாத்தை ‘பெருந்தன்மையோடு’ வேட்பாளராக்கிவிட்டார் பெருந்தகை. இதனால் திருச்சிக்குள் தொகுதியை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அடைக்கலராஜ் மகன் லூயிஸ் ஏமாந்து போனார். லெனின் பிரசாத்தால் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பதவிக்கு கொண்டுவரப்பட்டவர்தான் சூரியபிரகாஷ். அந்த பாசத்தில் செல்வப்பெருந்தகை மூலம் சூரிக்கு கவுண்டம்பாளையத்தை உறுதிப்படுத்தினார் லெனின்.
இதில் என்ன வேடிக்கை என்றால், முதல்கட்ட தேர்வில், “நீ இப்போதுதான் பொறுப்புக்கு வந்திருக்கிறாய்” என்று சொல்லி கிரிஷ் சோடங்கரால் ஒதுக்கப்பட்டவர் சூரியபிரகாஷ். அதன்பிறகும், அவருக்கு சீட்டை உறுதி செய்திருக்கிறது லாபி. கோவை மாவட்டத்தில் மயூரா ஜெயக்குமாரை தலைதூக்கவிடக் கூடாது என நினைத்தவர்கள், சூரியபிரகாஷுக்கும் கமல் கட்சியில் இருந்து வந்த ஸ்ரீநிதி நாயுடுவுக்கும் (சிங்காநல்லூர்) சீட் ஒதுக்க ரொம்பவே மெனக்கிட்டார்கள். இப்போது, ஸ்ரீநிதி காங்கிரஸ் கட்சியை விட்டே போய்விட்டார்.
இதேபோல, பென்னாகரம் தொகுதியை காங்கிரஸ் முதலில் கேட்கவே இல்லை. பாமகவின் ஜி.கே.மணி கேட்டுக் கொண்டதால் அந்த தொகுதியை திமுகதான் காங்கிரஸ் பட்டியலில் சேர்த்தது. எம்எல்ஏ சீட்டுக்காகவே கட்சியில் சேர்ந்த ஜி.கே.மணியின் மகன் தமிழ்க்குமரனுக்கு ஒரே வாரத்தில் பென்னாகரம் சீட்டை உறுதி செய்தது காங்கிரஸ். இதுவும் ‘சும்மா’ நடந்திருக்காது.
இதேபோல, கேரளவாசியான பிரவீனை விளவங்கோட்டில் கொண்டு வந்து நிறுத்தியதில் கே.சி.வேணுகோபாலின் கைங்கர்யம் இருக்கிறது. மயிலாடுதுறையில் சிட்டிங் எம்எல்ஏவான சு.ராஜகுமாரை, வயதை காரணம் காட்டி மாவட்டத் தலைவர் பதவியில் இருந்து தூக்கினார்கள். இம்முறை தேர்தலிலும் அவரை ஓரங்கட்டிவிட்டு தஞ்சையில் இருந்து வேட்பாளரை இறக்குமதி செய்தார்கள்.
இதற்கு நடுவே, விஜய் கட்சியுடன் கூட்டணி வைக்க காங்கிரஸ் தரப்பில் ஒரு மூவ் நடந்தது. சில பல கோடிகளை டெல்லி வரைக்கும் ‘டிரான்ஸ்ஃபர்’ செய்து அந்த நகர்வையும் தடுத்து நிறுத்தி திமுக கூட்டணிக்கு பங்கம் வராமல் பார்த்துக் கொண்டதும் இங்குள்ள காங்கிரஸ்காரர்கள்தான். ஆக, காங்கிரஸ் வேட்பாளர் பட்டியலில், பணம், சாதி, தலைவர்கள் லாபி என அனைத்தும் இம்முறை வேலை செய்திருக்கிறது.
இப்போது கிரிஷ் சோடங்கர் வரைக்கும் குற்றம்சாட்டி உள்ளார் ஜோதிமணி. ஆனால், கூட்டணி ஆட்சி, விஜய்யுடன் கூட்டணி என்பதில் உறுதியாக நின்ற சோடங்கர் அதை சாதித்தும் காட்டிவிட்டார். அதற்கான அங்கீகாரமாக அவரை கோவா மாநிலத் தலைவராக நியமித்துவிட்டது காங்கிரஸ் தலைமை. அதேசமயம், திமுகவின் கிளைக் கழகமாகவே தமிழக காங்கிரஸை வழிநடத்தி வேட்பாளர் தேர்வில் இத்தனை முறைகேடுகளுக்கு வழிவிட்ட செல்வப்பெருந்தகையை இன்னமும் தலைவர் பொறுப்பில் வைத்திருக்கிறார்களே என்ற ஆதங்கத்தில்தான் வெடித்துச் சிதறி இருக்கிறார் ஜோதிமணி” என்றார்கள்.
இன்னும் சிலரோ, “தலைப்புச் செய்திகளில் வரவேண்டும் என்பதற்காக இப்படி எல்லாம் பேசும் ஜோதிமணி, “தூத்துக்குடியில் காங்கிரஸ்காரர் மீது திமுகவினர் தாக்குதல் நடத்தியது குறித்தும், சீர்காழியில் ராகுல் காந்தியின் உருவ பொம்மையை கொளுத்திய திமுகவினர் குறித்தும் எதுவும் பேசாமல் இருப்பது ஏன்?” என்று கொக்கி போடுகிறார்கள்.