வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் செப்.19 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் செப்.19 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
Updated on
2 min read

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் செப்.19-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தென்மேற்கு மத்தியப் பிரதேசம் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு விதர்பா பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சியிலிருந்து மன்னார் வளைகுடா வரை மராத்வாடா, வடக்கு உள் கர்நாடகா, ராயலசீமா மற்றும் தமிழக பகுதிகள் வழியாக சுமார் 1.5 கி.மீ உயரம் வரை, ஒரு காற்றழுத்த தாழ்வுப் பாதை நிலவுகிறது.

இதன் காரணமாக தமிழகத்தில் நாளையும் (செப்.4), நாளை மறுதினமும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.

இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் மற்றும் கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

16-ம் தேதி நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும், இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, தருமபுரி, ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் ஒருசில இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஒருசில இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

17-ம் தேதி மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

18, 19 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக திருவண்ணாமலை மாவட்டம் புலியூரில் 10 செ.மீ, காட்டுமலையனூரில் 8 செ.மீ, செங்கம், கீழ்பென்னாத்தூர், சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியில் தலா 7 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் செப்.19 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு
லீ மேன்ஸ் கோப்பை கார் பந்தயம்: சில்வர்ஸ்டோன் சுற்றை 38-வது இடத்தில் நிறைவு செய்த அஜித் குழு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in