தமிழகத்தில் 15ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம்

சென்னை வானிலை ஆய்வு மையம் | கோப்புப் படம்
சென்னை வானிலை ஆய்வு மையம் | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் 15-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்க வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வட தமிழக கடலோர பகுதிகளின் மேல் சுமார் 5.8 கிமீ உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நாளையும் (ஆக.10), நாளை மறுதினமும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

ஆகஸ்டு 12, 13 தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், வட கடலோர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், 14-ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும், 15-ம் தேதி லேசான மழையும் பெய்யக்கூடும்.

இன்று முதல் 13-ம் தேதி வரை வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் வழக்கத்தை விட 5 டிகிரி ஃபாரன்ஹீட் வரை அதிகமாகவும், இதர தமிழகத்தில் வழக்கமான அளவிலும் இருக்கும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகத்தில் இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக சென்னை பள்ளிக்கரணை, கோவை மாவட்டம் சின்கோனா, உபாசியில் தலா 6 செமீ, சென்னை மாவட்டம் அம்பத்தூர், மேடவாக்கம், கோவை மாவட்டம் சின்னக்கல்லார், வால்பாறையில் தலா 5 செமீ, ராணிப்பேட்டை மாவட்டம் கலவை, அம்மூர், வாலாஜாபேட்டை, சென்னை ராஜா அண்ணாமலை புரம், அடையார், கோவை மாவட்டம் சோலையார், வேலூர் மாவட்டம் காட்பாடி, ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு ஆகிய இடங்களில் தலா 3 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் | கோப்புப் படம்
“மேகமலை, வருசநாடு வன கிராம மக்களை வெளியேற்றும் முடிவை கைவிட வேண்டும்” - சீமான்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in