

சென்னை: வேலூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்றும், நாளையும் (பிப்.11, 12) அதிகாலை நேரத்தில் மிதமான பனிமூட்டம் நிலவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய விஞ்ஞானி வி.ஆர்.துரை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்றும், நாளையும் வறண்ட வானிலை நிலவும். வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, நீலகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் மிதமான பனிமூட்டம் காணப்படும்.
சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சேலம், ஈரோடு மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை நேரத்தில் லேசான பனிமூட்டம் இருக்கும்.
வரும் 13-ம் தேதி தென் தமிழகம் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும். அதே நேரத்தில், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், ஈரோடு, திண்டுக்கல், நீலகிரி, நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலையில் மிதமான பனிமூட்டம் காணப்படும். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கை, ராணிப்பேட்டை,வேலூர், திருப்பத்தூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகாலை லேசான பனிமூட்டம் இருக்கும்.
தென்கிழக்கு வங்கக் கடலின் சில பகுதிகள், இந்தியப் பெருங்கடல் கிழக்கு பகுதி, தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால், மீனவர்கள் இன்றும், நாளையும் அந்தப் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம்.