

முதல்வர் ஸ்டாலின் நேற்று கொளத்தூர் தொகுதிக்குச் சென்று, வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்தார். உடன் கண்கலங்கிய நிலையில் சேகர்பாபு. | படம்: ம.பிரபு |
சென்னை: கொளத்தூர் தொகுதி மக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று நன்றி தெரிவித்தார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கையில், ``தேர்தலில் தோல்வியுற்றாலும், நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாக சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை எப்போதும் செய்து வருகிறோம்.
அந்த வகையில் திமுக வேட்பாளர்கள் அனைவரும், உடனடியாக வாக்களித்த மக்களை சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டும்'' என உத்தரவிட்டிருந்தார். அதற்கு முன் மாதிரியாக நேற்று மாலை அவரே கொளத்தூர் தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தார்.
மேயர் சிட்டிபாபு பாலத்தில் தொடங்கி பெரவள்ளூர் காமராஜர் சிலை வரை 2 கி.மீ.திறந்த வெளி வாகனத்தில் சென்ற ஸ்டாலின், சாலையில் இருபக்கமும் கூடியிருந்த திமுக தொண்டர்கள் மற்றும் மக்களுக்கு நன்றி தெரிவித்தார்.
ஏராளமான இளைஞர்கள், பெண்கள் கண்ணீருடன் அவரை வரவேற்றனர். அப்போது அவருடன் இருந்த சேகர்பாபு அழுதநிலையில், திமுக தொண்டர்களும் பலர் கண்ணீர்விட்டு அழுதனர். மக்களின் அழுகையை பார்த்த ஸ்டாலின், தொண்டர்களிடம் அழவேண்டாம் எனக் கூறினார்.
இதனிடையே, அவர் வெளியிட்ட சமுக வலைதள பதிவில் கூறியிருப்பதாவது: கொளத்தூருக்கும் எனக்குமான உறவு தேர்தல் வெற்றி, தோல்விகளைக் கடந்தது. 15 ஆண்டுகாலம் எனக்கு ஆதரவு நல்கியவர்கள் கொளத்தூர் தொகுதி மக்கள். அதில், 10 ஆண்டுகள் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தும், 5 ஆண்டுகள் ஆளும்கட்சியாகவும் என்னால் இயன்ற அனைத்துத் திட்டங்களையும் கொளத்தூருக்கு கொண்டு வந்து நிறைவேற்றினேன்.
தமிழகத்தின் மாடல் தொகுதியாக அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் செய்து கொடுத்து, எந்தக் கோரிக்கையானாலும் நிறைவேற்றிக் கொடுத்த பெருமிதத்தோடே மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தேன்.
ஒவ்வொரு தெருவிலும் சென்றபோது அங்கு நான் உருவாக்கிய விளையாட்டரங்கம், பூங்கா, முதல்வர் படைப்பகம், நூலகம், திருமண மாளிகை, பேருந்து நிலையம், மருத்துவமனை, பள்ளிக்கூடங்கள், கல்லூரி போன்றவற்றைக் கண்டு என் கடமையை சரிவர ஆற்றியிருப்பதில் மனநிறைவு கொண்டேன்.
உணர்ச்சிப் பெருக்கோடு என் நன்றியை ஏற்றுக்கொண்ட மக்களுக்காக என்றும் நான் உண்மையாக உழைப்பேன் என்று கூறியுள்ளார். அடுத்தடுத்த நாட்களிலும் தொகுதியில் அனைத்து பகுதிகளுக்கும் சென்று மக்களுக்கு ஸ்டாலின் நன்றி தெரிவிக்க உள்ளார்.