

சென்னை: நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில் மயிலாடுதுறை, மேலூர், குளச்சல், விளவங்கோடு மற்றும் கிளியூர் ஆகிய 5 இடங்களில் மட்டுமே அக்கட்சிக்கு வெற்றி கிடைத்தது.
இந்தச் சூழலில், வெற்றி பெற்ற எம்எல்ஏ-க்களுடனான ஆலோசனைக் கூட்டம், தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை மற்றும் மாநில தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தலைமையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் எம்எல்ஏ-க்கள் ஜமால் முகமது யூனூஸ், விஸ்வநாதன், தாரகை கத்பட், பிரவீன் மற்றும் ராஜேஷ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர். ஆலோசனையின்போது, “தற்போதுள்ள அரசியல் சூழலில் நாம் திமுக கூட்டணியிலேயே நீடிக்க வேண்டும்; அவசரப்பட்டு தவெக ஆதரவு போன்ற விவகாரங்களில் எந்த முடிவையும் எடுக்க வேண்டாம்” என எம்எல்ஏ-க்களுக்கு செல்வப்பெருந்தகை அறிவுறுத்தியதாகத் தெரிகிறது.
ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, “தவெக-வுக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக அகில இந்திய காங்கிரஸ் தலைமை மட்டுமே இறுதி முடிவு எடுக்கும்” என்று தெரிவித்தார்.
முன்னதாக, காங்கிரஸ் எம்எல்ஏ-க்கள் அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்துப் பேசினர். அந்த சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தேர்தல் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கூறுகையில், “தமிழக மக்கள் மாற்றத்தை விரும்பி வாக்களித்துள்ளனர்.
குறிப்பாக இளைஞர்களும், பெண்களும் தவெக-வை நோக்கித் திரும்பியதே அந்த கட்சியின் பிரம்மாண்ட வெற்றிக்கு முக்கிய காரணம். தவெக தரப்பிலிருந்து என்னை இதுவரை யாரும் அணுகவில்லை. கட்சியின் பிற நிர்வாகிகளை அவர்கள் தொடர்பு கொண்டார்களா என்பது எனக்குத் தெரியாது.
இருப்பினும், காங்கிரஸின் பல நிர்வாகிகள் தவெக-வை ஆதரிக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். தவெக தனது சட்டப்பேரவை குழுத் தலைவரைத் தேர்வு செய்த பின் காங்கிரஸைத் தொடர்பு கொள்ளக்கூடும்.
இதுகுறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி, வேணுகோபால் ஆகியோருக்கு அறிக்கை அனுப்பப் பட்டுள்ளது. அவர்கள் அனைவரும் ஆலோசித்து இறுதி முடிவு எடுப்பார்கள்.
விஜய்யை சாதாரணமாகக் கருத வேண்டாம் எனத் தேர்தலுக்கு முன்னதாகவே நான் எச்சரித்திருந்தேன்” என்று குறிப்பிட்டார். தவெகவுக்கு பெரும்பான்மை கிடைக்காததால் அக்கட்சிக்கு காங்கிரஸ் ஆதரவு அளிக்கப்போவதாக பேசப்பட்டு வரும் சூழலில் இந்த ஆலோசனைக் கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.