

சென்னை: திமுக தலைவரும், முன்னாள் முதல்வருமான மு.க.ஸ்டாலின் ஜூலை 5-ம் தேதி தனது குடும்பத்தினருடன் லண்டனுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் பேரனும், சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவருமான உதயநிதி ஸ்டாலினின் மகனுமான இன்பநிதி, லண்டன் மான்செஸ்டர் நகரில் உள்ள புகழ் பெற்ற கல்லூரியில் விளையாட்டு மேம்பாடு தொடர்பான உயர் படிப்பை மேற்கொண்டு வந்தார்.
தனது படிப்பை வெற்றிகரமாக முடித்துவிட்டு தற்போது அவர் சென்னை திரும்பியுள்ளார். இந்நிலையில், இன்பநிதி படித்த மான்செஸ்டர் கல்லூரியின் பட்டமளிப்பு விழா ஜூலை மாதம் நடைபெற உள்ளது.
இந்த சிறப்புமிக்க நிகழ்வில் நேரில் பங்கேற்று வாழ்த்துவதற்காக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவரது மனைவி துர்கா ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பேரன் இன்பநிதி ஆகியோர் ஜூலை 5-ம் தேதி சென்னையில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்டு செல்கின்றனர்.
பேரனின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட பிறகு, மு.க.ஸ்டாலின், லண்டனிலேயே 10 நாட்கள் தங்கி ஓய்வெடுக்கத் திட்டமிட்டுள்ளார். அதன்பிறகு ஜூலை பிற்பகுதியில் அவர் சென்னை திரும்புவார் என்று கூறப்படுகிறது.