

முதல்வர் மு.க.ஸ்டாலின்
சென்னை: “அன்றும் இன்றும் என்றும் இந்திக்கு இங்கே இடமில்லை” என்று மொழிப்போர்த் தியாகிகள் வீரவணக்க நாளில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “மொழியை உயிராய் நேசிக்கும் ஒரு மாநிலம், இந்தித் திணிப்புக்கு எதிராக ஒன்றுதிரண்டு போராடியது. திணித்த ஒவ்வொரு முறையும் அதே வீரியத்தோடு போராடியது. இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு மொழிவழித் தேசிய இனங்களின் உரிமையையும் அடையாளத்தையும் காத்தது. தமிழுக்காகத் தங்கள் இன்னுயிரையே ஈந்த அந்தத் தியாகிகளை நன்றியோடு வணங்குகிறேன். மொழிப்போரில் இனி ஒரு உயிரும் போகாது; நம் தமிழுணர்வும் சாகாது! இந்தித் திணிப்பை என்றும் எதிர்ப்போம்!” என்று பதிவிட்டுள்ளார்.
தொடர்ந்து தாளமுத்து, நடராசன் உருவப் படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதை ஒட்டிய வீடியோவை முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டு, “வீரவணக்கம், வீரவணக்கம்! மொழிப்போர்த் தியாகிகளுக்கு வீரவணக்கம். 1938-ஆம் ஆண்டு மொழிப்போர்க் களத்தின் முதற்கட்டத்தில் உயிர்த்தியாகம் செய்த நடராசன் - தாளமுத்து ஆகியோருக்கு மூலக்கொத்தளத்தில் அமைந்துள்ள அவர்களது நினைவிடத்தில் வீரவணக்கம் செலுத்தினேன். மொழிப்போர் வீராங்கனை அன்னை தருமாம்பாளுக்கும் நினைவஞ்சலி செலுத்தினேன்.
எழும்பூரில் அமைந்துள்ள தாளமுத்து நடராசன் மாளிகையில் திருவுருவச் சிலைகளையும் திறந்துவைத்தேன்.
மொழிப்போர்களில் உயிர்ப்பலியான மற்ற தியாகியரையும் இந்நாளில் தமிழுணர்ச்சியோடு நினைவுகூர்கிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.