

திமுக எம்.பிக்களுடன் மு.க.ஸ்டாலின்ஆலோசனை
சென்னை: “ஒன்றிய அரசு கொண்டு வரும் எந்தப் புதிய சட்டமாக இருந்தாலும் மாநில உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தினையும் பாதுகாத்திடும் வகையிலேயே திமுகவின் நிலைப்பாடு இருக்கும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் லண்டனில் இருந்தபடி காணொலியில் திமுக எம்.பிக்களுடன் மழைக்கால கூட்டத்தொடர் தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில், “மேகேதாட்டு அணை கட்டும் முயற்சிகளுக்கு எதிராகவும், காவிரியில் தமிழகத்துக்குள்ள நியாயமான உரிமையைக் காக்கவும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் உரத்துக் குரலெழுப்புவார்கள்.
ஒன்றிய அரசு கொண்டு வரும் எந்தப் புதிய சட்டமாக இருந்தாலும் மாநில உரிமைகளையும் அரசியலமைப்புச் சட்டத்தினையும் பாதுகாத்திடும் வகையிலேயே திமுகவின் நிலைப்பாடு இருக்கும். தமிழக மக்களின் மனசாட்சியாய் ஒவ்வொரு எம்.பியும் செயல்படுவார்கள்” என்று பதிவிட்டுள்ளார்.