

திருமாவளவன்
திருச்சி: தமிழக முதல்வர் ஸ்டாலின் இண்டியா கூட்டணிக்கு தலைமை தாங்க வேண்டும் என்கிற காங்கிரஸ் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கருத்தை நானும் வழிமொழிகிறேன் என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறினார்.
திருச்சி விமான நிலையத்தில் விசிக தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: திருச்சி- தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் துவாக்குடி வரை சர்வீஸ் சாலை அமைக்க வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதுபோன்ற போராட்டங்கள் தேர்தலுக்காக நடத்தப்படுகிறது என சுருக்கி பார்க்க தேவையில்லை. தமிழக அரசும், மத்திய அரசும் சர்வீஸ் சாலை அமைக்கும் பணியை தீவிரப்படுத்த வேண்டும்.
திமுக கூட்டணியில் தான் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. அதில் எந்த சந்தேகமும் தேவையில்லை. கூட்டணியில் எந்த குழப்பம் இல்லை. திமுக கூட்டணி கட்டுக்கோப்பாக உள்ளது. இதே கட்டுக்கோப்புடனே தேர்தலை சந்திப்போம். கூட்டணி உருவாக்குவதிலும், அதை பாதுகாப்பதிலும் நாங்கள் அக்கறையோடு இருக்கிறோம்.
இண்டியா கூட்டணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமை தாங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் மணிசங்கர் அய்யர் கூறிய கருத்து வரவேற்க வேண்டியது. அவர் முன்மொழிந்ததை நான் வழிமொழிகிறேன்.
காங்கிரஸ் கட்சி கூட்டணியில் பங்கு கேட்பதில் தவறில்லை. கூட்டணியில் இருக்கிறோம் என்கிற உரிமையில் தான் கேட்கிறார்கள். அது தருவதா, வேண்டாமா என்பது பேச்சுவார்த்தையில் தான் தெரியும். கூட்டணி ஆட்சி தமிழகத்திற்கு பொருந்தாது என முதல்வர் தெரிவித்திருக்கிறார். எப்படி பொருந்தி வராது என்பதையும் அவர் விளக்குவார்.
எங்களைப் போல காங்கிரஸ் நிலைப்பாடு எடுக்க வேண்டும் என்று கிடையாது. நாங்கள் தெளிவாக இருக்கிறோம். எங்களது கோரிக்கைகளை பேச்சுவார்த்தையில் வைப்போம். இந்த கூட்டணி உருவாக்குவதில் எங்கள் பங்கு இருக்கிறது. திமுக கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை.
மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கான கோரிக்கை அல்ல ஒட்டுமொத்தமாக மக்களின் கோரிக்கை. இந்தியா முழுவதும் போதைப் பழக்கம் அதிகரித்துள்ளது என்ற உண்மையை புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றது.
தமிழகத்தில் மதுக்கடைகளை அடுத்தடுத்து படிப்படியாக குறைத்து, முழுமையாக மூட வேண்டும் என்ற கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். அந்த நிலைப்பாட்டில் இன்றும் உறுதியாக உள்ளோம். அது தொடர்பாக எந்த முன்னேற்றமும் இல்லை என்பது கவலை அளிக்கிறது. மறுபடியும் ஆளும் கட்சியான திமுகவிற்கு இந்த கோரிக்கையை நினைவூட்டுகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.