

சென்னை: கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் கொளத்தூர் தொகுதியில் தவெக சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
இதையடுத்து கொளத்தூர் தொகுதியில் பயன்படுத்தப்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்ய தேர்தல் ஆணையத்தின் அனுமதி கேட்டு,அனுமதி பெற்றவுடன் அதன் அடிப்படையில் மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ தலைமையிலான வழக்கறிஞர்கள் சிந்தாதிரிப்பேட்டையில் வைக்கப்பட்டிருந்த வாக்குப்பதிவு இயந்திரங்களை ஆய்வு செய்தனர்.
பல்வேறு முறைகேடுகள்: அப்போது தொகுதியில் 1, 17,28, 32, 75, 78, 79, 84, 87, 112,122, 157, 170 ஆகிய வாக்குச்சாவடிகளில் வைக்கப்பட்டிருந்த விவிபேட், வாக்கு பதிவு இயந்திரம், கன்ட்ரோல் யூனிட் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டன. பெல் நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட பொறியாளர் உடன் இருந்தார். விவிபேட் மற்றும் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. இதில் 6 வாக்குச்சாவடிகளில் பதிவான வாக்குகள் மற்றும் விவிபேட்களை ஒப்புகை சீட்டுகளை ஒப்பிட்டுப் பார்த்ததில் பல்வேறு முறைகேடுகள் கண்டறியப்பட்டுள்ளன.
குறிப்பாக வாக்குப்பதிவு இயந்திரங்களில் மென்பொருள் கோளாறு ஏற்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறுகளை சுட்டிக்காட்டிய பிறகும் சம்பந்தப்பட்ட தேர்தல் அதிகாரி உரிய வழிகாட்டு நெறிமுறைகளின்படிதான் சோதனை மற்றும் சரிபார்த்தல் நடைபெற்றதாக தெரிவித்துள்ளார்.
பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதால் அனைத்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட்களை சரிபார்க்க வேண்டும். மேலும், தவெக வேட்பாளர் வி.எஸ்.பாபு வெற்றி பெற்றதை செல்லாது என்றும், நான் வெற்றி பெற்றதாகவும் அறிவிக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.