

சென்னை: சட்டப்பேரவைத் தேர்தலில் 2 தொகுதிகளில் போட்டியிட்ட முதல்வர் விஜய், திருச்சி கிழக்கு தொகுதியை ராஜினாமா செய்தார். அதேபோல எம்.ஆர்.விஜயபாஸ்கர் (கரூர்), சி.விஜயபாஸ்கர் (விராலிமலை), ஜெயக்குமார் (பெருந்துறை), இசக்கி சுப்பையா (அம்பாசமுத்திரம்) ஆகியோரும் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்தனர்.
இவர்களது வெற்றியை எதிர்த்த தேர்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளபோது, இந்த தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதிக்கக் கோரி பாளையங்கோட்டையைச் சேர்ந்த வெங்கடாஜலபதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம் 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்க தடை விதித்தது.
இந்த தடையை நீக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. தலைமை நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரி, நீதிபதி ஜி.அருள்முருகன் அமர்வில் இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, தேர்தல் ஆணையம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘நீதிமன்ற உத்தரவுப்படி, தேர்தல் வழக்குகள் முடியும் வரை 5 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் அறிவிக்கும் திட்டம் இல்லை’ என்று கூறப்பட்டுள்ளது. இதையடுத்து, நீதிபதிகள், விசாரணையை செப்.8-ம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.