

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
சென்னை: “கர்நாடகாவில் நிகழ்ந்த 3 தமிழர்கள் கொலையில் வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற நீதி விசாரணை நடத்திக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அவர்கள் குடும்பத்தினருக்கு அரசுப் பணிக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “கர்நாடக வனப்பகுதியில் தமிழர்கள் மூவரை அம்மாநில வனத்துறையினர் அநியாயமான முறையில் சுட்டுக் கொன்றிருக்கும் சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
மனித உயிர்கள் குறித்த எந்த மதிப்பும் இல்லாமல் நிகழ்த்தப்பட்டிருக்கும் இந்தக் கொடூரச் செயல் கடும் கண்டனத்துக்குரியது. குற்றமிழைத்தவர்களைக் காப்பாற்றுவதற்கான முயற்சிகளில் கர்நாடக வனத்துறையினர் ஈடுபடுவதாகத் தெரிகிறது.
அது தவிர்க்கப்பட்டு, இதனைக் கொலை வழக்காகப் பதிந்து, வெளிப்படைத்தன்மை மிக்க, பாரபட்சமற்ற நீதி விசாரணை நடைபெற்று இதற்குக் காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும். அப்போதுதான் இனி இப்படி ஒரு குற்றத்தில் ஈடுபடும் துணிச்சல் எவருக்கும் வராது.
மேகேதாட்டு விவகாரம் போல இதிலும் வாய்மூடி இருக்காமல், இச்சம்பவத்தில் தமிழ்நாடு அரசு கர்நாடக அரசுக்குத் தனது கண்டனத்தைப் பதிவுசெய்திட வேண்டும்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தருவதோடு, அவர்களுக்கு அரசுப் பணியும் கிடைக்கச் செய்ய தமிழ்நாடு அரசு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
விசாரணைக்கு உத்தரவு
முன்னதாக, கர்நாடக முதல்வர் டி.கே.சிவகுமார், “இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்திருக்கின்றனர். காயமடைந்த ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 3 பேரின் உடல்களும் மைசூரு கே.ஆர்.மருத்துவமனைக்கு பிரேதப் பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது.
அவர்கள் நடத்திய தாக்குதலில் வனத்துறையை சேர்ந்த ஒருவர் காயமடைந்திருக்கிறார். கொல்லப்பட்டவர்களிடம் இருந்து 2 நாட்டு துப்பாக்கிகள், மான் இறைச்சி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு சாம்ராஜ்நகர் மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியிருந்தார்.
‘மாடு மேய்க்க சென்றார்கள்’
ஆனால், கொள்ளேகாலில் போராட்டத்தில் ஈடுபட்ட விஜய் கூறுகையில், “கொல்லப்பட்ட 3 பேரும் மாடு மேய்க்க சென்றவர்கள். இரவில் வனப்பகுதியிலே தங்கி மாடு மேய்ப்பார்கள். அவர்களை மான் வேட்டைக்குச் சென்றதாக சந்தேகப்பட்டு வனத்துறையினர் நெஞ்சு பகுதியில் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள்.
உயிரிழந்த 3 பேருக்கும் உரிய நியாயம் கிடைக்கும் வரை போராட்டம் நடத்துவோம். சம்பந்தப்பட்ட வனத்துறையினரை பணி நீக்கம் செய்வதுடன், அவர்கள் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும். ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்தி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்” என்றார்.