கோயில் நிலம் அபகரிப்பு வழக்கு: மதுரை நீதிமன்றத்தில் மு.க.அழகிரி ஆஜர்

மு.க.அழகிரி

மு.க.அழகிரி

படம்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

Updated on
1 min read

மதுரை: கோயில் இடம் ஆக்கிரமிப்பு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி மதுரை நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகேயுள்ள சிவரகோட்டையில் முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தனது மகன் துரை தயாநிதி பெயரில் பொறியியல் கல்லூரி கட்டியிருந்தார்.

இந்தக் கல்லூரி கட்டுவதற்காக விநாயகர் கோயில் இடத்தை அழகிரி தரப்பு ஆக்கிரமிப்பு செய்ததாக நில அபகரிப்பு பிரிவில் புகார் செய்தார். இதையடுத்து மு.க.அழகிரி உள்ளிட்ட 4 பேர் மீது 2014-ல் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.

இந்த வழக்கில் மு.க.அழகிரியை ஏமாற்றுதல், போலி ஆவணங்கள் தயாரித்தல், மோசடி பத்திரங்களை செயல்படுத்துதல் ஆகிய பிரிவுகளிலிருந்து விடுவித்தும், குற்றச்சதி மற்றும் குற்றவியல் நம்பிக்கை துரோகம் ஆகிய பிரிவுகளின் வழக்கு விசாரணையை சந்திக்கவும் 2021-ல் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.

சில பிரிவுகளில் அழகிரி விடுவிக்கப்பட்டதை எதிர்த்து நில அபகரிப்பு பிரிவு உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது. இதனை விசாரித்த உயர் நீதிமன்றம், அழகிரி அனைத்து குற்றச்சாட்டுகளையும் எதிர்கொள்ள வேண்டும். வழக்கிலிருந்து முழுமையாக விடுவிக்க வேண்டும் என்ற அழகிரியின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது என உத்தரவிட்டது. இதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் அழகிரி மேல்முறையீடு செய்தார்.

இதனை விசாரித்த நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்ற உத்தரவில் தலையிட விரும்பவில்லை என்று கூறி அழகிரியின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

இந்நிலையில், நில அபகரிப்பு வழக்கு மதுரை மாவட்ட முதலாவது குற்றவியல் நீதிமன்றத்தின் நீதிபதி ஆனந்த் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மு.க.அழகிரி நேரில் ஆஜரானார். பின்னர் விசாரணையை பிப்.2-க்கு நீதிபதி தள்ளிவைத்தார்.

நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு வெளியே வந்த மு.க.அழகிரியிடம், சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெறும் என செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அழகிரி, ‘யாராவது ஒருவர் வெற்றி பெறுவார்’ என பதிலளித்தார்.

<div class="paragraphs"><p>மு.க.அழகிரி</p><p></p></div>
‘தமிழக வளர்ச்சிக்கு ‘தடை’யாக மத்திய அரசு...’ - ஆளுநர் உரை கூறுவது என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in