

சென்னை: தென் மண்டலக் குழு உறுப்பினர்களாக அமைச்சர்கள் நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோரை ஆளுநர் நியமனம் செய்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் அவ்வப்போது நடத்தப்படும் தென் மாநில கவுன்சில் கூட்டத்தில் தென் மாநில முதல்வர்கள், தலைமைச் செயலர்கள், பங்கேற்பது வழக்கம். மாநிலங்களுக்கு இடையே நிலவும் எல்லைப் பிரச்சினைகள், நதிநீர் பங்கீடு, உள்கட்டமைப்பு மேம்பாடு, போக்குவரத்து தொடர்பு போன்ற பொதுவான சிக்கல்கள் குறித்து விவாதித்து சுமுகத் தீர்வு காணப்படும்.
அந்த வகையில், தமிழகத்தில் புதிதாக பொறுப்பேற்றுள்ள தவெக அரசு சார்பில், தென் மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்கான உறுப்பினர்களை ஆளுநர் நியமனம் செய்துள்ளார். முதல்வர் விஜய் தலைமையிலான இந்த குழுவில், அமைச்சர்கள் சி.டி.நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.
மாநில அரசு நிர்வாகத்தின் சார்பில் தலைமைச் செயலர் சாய்குமார் மற்றும் உள்துறைச் செயலர் மணிவாசன் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர். இதுதொடர்பான ஆணை அரசிதழில் வெளியிடப்பட்டுள்ளது. தென் மாநில முதல்வர்களுக்கான கவுன்சில் கூட்டம் விரைவில் நடைபெற உள்ளது. இதில் காவிரி நதிநீர் பிரச்சினை உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய வாழ்வாதாரக் கோரிக்கைகளை அரசு முன்வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.