குற்றவாளிகளுக்கு அதிக தண்டனை விதிக்க வகைசெய்யும் வினாத்தாள் கசிவு மசோதா இன்று தாக்கல்

மக்களவையில் எதிர்க்கட்சிகளும் ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்ப்பு
குற்றவாளிகளுக்கு அதிக தண்டனை விதிக்க வகைசெய்யும் வினாத்தாள் கசிவு மசோதா இன்று தாக்கல்
Updated on
2 min read

புதுடெல்லி: ​வி​னாத்​தாள் கசிவு தொடர்பான மோசடிகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு 10 ஆண்டு சிறை, ரூ.10 கோடி வரை அபராதம் விதிக்க வகை செய்யும் வினாத்தாள் கசிவு தடுப்பு மசோதா மக்​களவை​யில் இன்று தாக்​கல் செய்​யப்பட உள்​ளது.

நீட் வினாத்​தாள் கசிவு விவ​காரம் தொடர்​பாக தலைநகர் டெல்லி உட்பட நாடு முழு​வதும் பல்​வேறு போராட்​டங்​கள் நடை​பெற்​றன. இதைத் தொடர்ந்து கடந்த 24-ம் தேதி பிரதமர் நரேந்​திர மோடி தலை​மை​யில் நடை​பெற்ற அமைச்​சர​வைக் கூட்​டத்​தில், வினாத்தாள் கசிவு தடுப்பு மசோ​தாவுக்கு ஒப்​புதல் அளிக்​கப்​பட்​டது.

தற்​போது வினாத்​தாள் கசிவு தொடர்​பான வழக்​கு​கள், பொதுத்​தேர்​வு​கள் (முறை​கேடு​களை தடுத்​தல்) சட்​டம் 2024-ன் கீழ் விசா​ரிக்​கப்​படு​கின்​றன. இதில் முக்​கிய திருத்​தங்​கள் செய்​யப்​பட்டு புதிய மசோதா வரையறுக்​கப்​பட்டு உள்​ளது. மக்​களவை​யில் இந்த மசோதாவை மத்​திய பணி​யாளர், பயிற்​சித் துறை அமைச்​சர் ஜிதேந்​திர சிங் இன்று தாக்​கல் செய்ய உள்​ளார்.

இதுகுறித்து மத்​திய அரசு வட்​டாரங்​கள் கூறிய​தாவது: புதிய மசோ​தா​வின்​படி வினாத்​தாள் கசிவு குற்​ற​வாளி​களுக்கு குறைந்​த​பட்​சம் 5 ஆண்​டு​கள் சிறை தண்​டனை விதிக்​கப்​படும், குழு​வாக, கும்​பலாக முறை​கேட்​டில் ஈடு​படு​வோருக்கு 10 ஆண்​டு​கள் வரை சிறை தண்​டனை​யும் ரூ.10 கோடி வரை அபராத​மும் விதிக்​கப்​படும். முறை​கேடு​களில் ஈடு​படும் தேர்​வர்​கள் அடுத்த 8 ஆண்​டு​கள் எந்​த ஒரு பொதுத்​தேர்​வை​யும் எழுத முடி​யாது.

வினாத்​தாள் கசிவு தொடர்​பான வழக்​கு​களை விசா​ரிக்க சிறப்பு அதிரடிப் படை (எஸ்​டிஎப்) நியமிக்​கப்​படும். இந்த அதிரடிப் படை 2 மாதங்​களுக்​குள் விசா​ரணையை நிறைவு செய்ய வேண்​டும். வினாத்​தாள் கசிவு தொடர்​பான வழக்​கு​களை விசா​ரிக்க சிறப்பு விரைவு நீதி​மன்​றங்​கள் அமைக்​கப்​படும். இந்த நீதி​மன்​றங்​களில் நாள்​தோறும் விசா​ரணை நடை​பெறும். குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​யப்​பட்ட 3 மாதங்​களுக்​குள் விசா​ரணையை முடிக்க வேண்​டும்.

அந்​தந்த மாநில அரசுகள், உயர் நீதி​மன்ற தலைமை நீதிப​தி​களின் ஆலோ​சனை​களின்​படி சிறப்பு விரைவு நீதி​மன்​றங்​களை அமைக்க வேண்​டும். சிறப்பு நீதி​மன்​றங்​கள் அளிக்​கும் தீர்ப்பை எதிர்த்து உயர் நீதி​மன்​றங்​களில் மேல்​முறை​யீடு செய்​ய​லாம். இவ்​வாறு மத்​திய அரசு வட்​டாரங்​கள் தெரி​வித்​துள்​ளன.

இதற்​கிடையே, பிரதமர் மோடி நேற்று வெளி​யிட்ட செல்ஃபி வீடியோ​வில், ‘‘மாணவர்​களின் எதிர்​காலத்​துக்​காக மத்​திய அரசு பல்​வேறு நடவடிக்​கைகளை எடுத்து வரு​கிறது. அவர்​களது எதிர்​கால வாழ்க்​கையோடு விளை​யாடிய நபர்​கள் தற்​போது சிறை​யில் அடைக்​கப்​பட்​டுள்​ளனர். வினாத்​தாள் கசிவு விவ​காரம் தொடர்​பாக நாடாளு​மன்​றத்​தில் 27-ம் தேதி (இன்​று) புதியமசோதா தாக்​கல் செய்​யப்பட உள்​ளது. இதில் மிகக் கடுமை​யான விதி​கள் சேர்க்​கப்​பட்​டுள்​ளன’’ என்று தெரி​வித்​துள்​ளார்.

நாடாளு​மன்ற மழைக்​கால கூட்​டத் தொடர் கடந்த 20-ம் தேதி தொடங்​கியது. நீட் வினாத்​தாள் கசிவு, நாடாளு​மன்ற பேரணி​யில் நடத்​தப்​பட்ட தடியடி உள்​ளிட்ட காரணங்​களை முன்​னிறுத்தி இரு அவை​களி​லும் எதிர்க்​கட்​சிகள் தொடர் அமளி​யில் ஈடு​பட்டு வந்​தன.

இதனால் மழைக்​கால கூட்​டத் தொடரின் முதல் வாரம் முழு​மை​யாக முடங்​கியது. தற்​போது 2-வது வாரத்​தின் முதல் நாளில் வினாத்​தாள் கசிவு தடுப்பு மசோதா தாக்​கல் செய்​யப்பட உள்​ளது. இதனால் இரு அவை​களும் சுமுக​மாக செயல்​படும், புதிய மசோ​தாவுக்​கு எதிர்க்​கட்​சிகளும்​ ஆதரவு அளிக்​கும்​ என்​று எதிர்​பார்​க்​கப்​படுகிறது.

குற்றவாளிகளுக்கு அதிக தண்டனை விதிக்க வகைசெய்யும் வினாத்தாள் கசிவு மசோதா இன்று தாக்கல்
மதுரை, கோவை ‘மெட்ரோ’ மீண்டும் நிராகரிப்பு: போதிய மக்கள்தொகை இல்லை என்று மத்திய அரசு காரணம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in