

கோப்புப் படம்
சென்னை: தவெக தோழமைக் கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்குமாறு காங்கிரஸ், விசிக தலைவர்களை சந்தித்து அமைச்சர்கள் அழைப்பு விடுத்தனர்.
தவெக தோழமைக் கட்சிகள் உடனான முதலாவது ஆலோசனைக் கூட்டம் முதல்வர் விஜய் தலைமையில் கடந்த ஜூலை 1-ம் தேதி நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக, 2-வது கட்ட ஆலோசனைக் கூட்டம் பனையூரில் உள்ள தவெக தலைமை அலுவலகத்தில் முதல்வர் விஜய் தலைமையில் 9-ம் தேதி நடைபெற உள்ளது.
அந்த வகையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், மதிமுக பொதுச் செயலாளர் வைகோ ஆகியோரை அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, நிர்மல்குமார், ராஜ்மோகன் ஆகியோர் கடந்த 4-ம் தேதி சந்தித்து அழைப்பு விடுத் தனர்.
அமைச்சர்கள் சந்திப்பு: இந்நிலையில், சென்னை சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், பிரவீன் சக்கரவர்த்தி எம்.பி. ஆகியோரை அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ் ஆகியோர் நேற்று சந்தித்து, கூட்டத்தில் பங்கேற்க அழைப்பு விடுத்தனர். பின்னர், சென்னை அசோக் நகரில் உள்ள இல்லத்தில் விசிக தலைவர் திருமாவளவனை சந்தித்து அழைப்பு விடுத்தனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் விசிக தலைவர் திருமாவளவன் கூறும்போது, “கூட்டணி தொடர்பான கலந்தாய்வுக் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் சார்பில் அமைச்சர்கள் குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர். நிச்சயமாக கூட்டத்தில் பங்கேற்போம். இதில், தவெக தலைமையில் கூட்டணி அமைப்பதற்கான முடிவு எட்டப்படும் என நம்புகிறோம்” என்றார்.
கம்யூனிஸ்ட் கமிட்டி முடிவு செய்யும்: இடதுசாரிகள் கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு கூட்டம், தி.நகரில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் மாநில தலைமை அலுவலகமான பாலன் இல்லத்தில் நேற்று நடைபெற்றது.
பின்னர் செய்தியாளர்களிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்தியகம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், மார்க்சிஸ்ட் - லெனினிஸ்ட் விடுதலை மாநிலச் செயலாளர் பழ.ஆசைத்தம்பி உள்ளிட்டோர் கூட்டாக கூறியதாவது: இடதுசாரிகள் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் திருச்சியில் உழைக்கும் மக்கள் பேரணி அக்.6-ம் தேதி நடத்தப்படும் என அறிவித்திருந்தோம்.
தவிர்க்க முடியாத காரணங்களால் அக்.15-ம் தேதிக்கு அந்த பேரணிமாற்றப்பட்டுள்ளது. சிபிஐ, சிபிஎம் வெளியில் இருந்து தவெக அரசுக்கு ஆதரவு அளித்து வரும் நிலையில், புதிதாக ஒரு கூட்டணியை உருவாக்குகிற முயற்சியில் தவெக களமிறங்கியுள்ளது. இதற்காக செப். 9-ம் தேதி கூட்டம் நடைபெறும் என அழைப்பு விடுத்துள்ளனர்.
கடந்த முறை கூட்டணி அமைப்பது குறித்து வெளிப்படையாக அழைப்பு விடுத்து, தவெக தலைமையில் கூட்டம் நடத்தப்படவில்லை. அதனால், அந்தக் கூட்டத்தில் நாங்கள் பங்கேற்க முடியாது என வெளிப் படையாக அறிவித்தோம். இந்த முறை இந்த நோக்கத்துக்காகத்தான் இக்கூட்டம் கூட்டப்படுவதாக அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர். இக்கூட்டத்தில் பங்கேற்பது குறித்து அந்தந்த கம்யூனிஸ்ட் கட்சிகள் தனித்தனியாக கமிட்டிகளை கூட்டி முடிவெடுக்கும். 9-ம் தேதிக்கு முன்பு எங்களது முடிவை அறிவிப்போம். இவ்வாறு அவர்கள் கூறினர்.