

புதுக்கோட்டையில் திரையரங்கு ஒன்றில் ஜனநாயகன் படம் பார்த்தபோது உணர்ச்சிவசப்பட்டு கண்ணீர் விட்டு அழுத தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ்.
புதுக்கோட்டை/கோவை/புதுவை: முதல்வர் விஜய் நடித்துள்ள ஜனநாயகன் திரைப்படம் உலகம் முழுவதும் நேற்று வெளியானது. தமிழகம் முழுவதும் 1000 திரையரங்குகளில் திரையிடப்பட்ட நிலையில் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நகரப்பகுதி மட்டுமில்லாமல் கிராமப்புறங்களிலும் அனைத்துதிரையரங்குகளிலும் ஜனநாயகன் படம் வெளியானது.
திரையரங்கம் முன்பு கட் அவுட்டுக்கு பால் அபிஷேகம் செய்தும் மேளதாளம் முழங்கவும் ரசிகர்கள், தொண்டர்கள் நடனமாடினர். பல்வேறு இடங்களில் பட்டாசு வெடித்தும் கொண்டாடினர். இந்நிலையில் ஜனநாயகன் திரைப்படத்தை பார்த்தபோது அமைச்சர்கள் முகமது பர்வேஸ், சம்பத்குமார் மற்றும் விக்னேஷ் ஆகியோர் உணர்ச்சிப் பெருக்கால் கண்ணீர் விட்டு அழுதனர். இந்தக் காட்சி வேகமாக பரவி வருகிறது.
புதுக்கோட்டையில் நேற்று ‘ஜனநாயகன்’ திரைப்படம் பார்த்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் முகமது பர்வேஸ் நெகிழ்ச்சியில் கண்ணீர் விட்டார்.புதுக்கோட்டை மேலராஜ வீதியில் உள்ள ஒரு திரையரங்கில் அமைச்சர் முகமது பர்வேஸ் கட்சியினருடன் சென்று திரைப்படத்தை பார்த்து ரசித்தார்.
அப்போது, திரையில் விஜய்யைப் பார்த்ததும் தன்னை அறியாமலேயே நெகிழ்ந்து கண்ணீர் விட்டார். இதேபோல, கரூர் திண்ணப்பா திரையரங்கில் ஜனநாயகன் படத்தை பார்த்த தவெக மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன், திரையில் விஜய் தோன்றியதும் அதைப் பார்த்து தேம்பித் தேம்பி அழுதார்.
கோவையில்... கோவை நூறடி சாலையில் உள்ள கங்கா திரையரங்கில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமாரும், போத்தனூர் சாரதா மில் சாலையில் உள்ள அரசன் திரையரங்கில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைகள் துறை அமைச்சர் கே.விக்னேஷூம் ரசிகர்களுடன் அமர்ந்து படம் பார்த்தனர். படம் முடியும் தருவாயில் அமைச்சர்கள் சம்பத்குமார், விக்னேஷ் ஆகியோர் உணர்ச்சி பெருக்கால் கண்ணீர் விட்டு அழுதனர்.
புதுச்சேரி: புதுச்சேரியில் நேற்று காலை 7 மணிக்கு ஜனநாயகன் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காட்சிகள் ரத்து செய்யப்பட்டன. பல திரையரங்கம் முன்பு காலை முதலே ரசிகர்கள் காத்திருந்தனர். நேற்று காலை 10.45 மணியளவில்தான் முதல் காட்சி தொடங்கியது. படம் தொடங்கியதும் ‘தமிழக முதல்வர் விஜய்’ என டைட்டில் வந்தவுடன் ரசிகர்கள் கோஷம் எழுப்பியும் விசில் அடித்தும் உற்சாகமாகக் கொண்டாடினர்.