சிஜேபி போராட்டத்துக்கு ஆதரவாக வெற்றிமாறன் முதல் அமீர் வரை பேசியது என்ன?

சிஜேபி போராட்டத்துக்கு ஆதரவாக வெற்றிமாறன் முதல் அமீர் வரை பேசியது என்ன?
Updated on
2 min read

சென்னை: டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவாக இன்று சென்னையில் நடந்த போராட்டத்தில் இயக்குநர்கள் வெற்றிமாறன், அமீர், பா.ரஞ்சித், நடிகை ஆண்ட்ரியா, பாடகர் தெருக்குரல் அறிவு ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

டெல்லியில் மாணவர்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தும், நீட் தேர்வை முழுவதுமாக ரத்து செய்யக்கோரியும், சென்னை எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் நீலம் பண்பாட்டு மையத்தின் ஒருங்கிணைப்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்தில் பங்கேற்று பேசியவர்கள் விவரம்:

வெற்றிமாறன்: “ஒரு நாட்டில் இளைஞர்கள் போராட்டத்துக்கு வருகிறார்கள் என்றால், அந்த நாட்டின் மற்ற அமைப்புகள் எதுவும் சரியாக செயல்படவில்லை என்று அர்த்தம். அதனால்தான் மாணவர்கள் போராட்டத்துக்கு வந்துள்ளனர். இன்று கரப்பான் பூச்சி ஜனதா கட்சியின் போராட்டம் என்பது ஒன்றிய அரசின் தோல்வி.

இந்த போராட்டம் வெறும் நீட் தேர்வில் நடந்த குளறுபடிகளை சரி செய்ய வேண்டும் என்பதற்காக மட்டும் இருக்கக் கூடாது. நீட் தேர்வையே தடை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையாக மாற வேண்டும். அதற்கான முன்னெடுப்புகளை நாம் அனைவரும் சேர்ந்து முன்னெடுக்க வேண்டும்.

நீட் தேர்வின் முதன்மையான நோக்கம், நம்மிடமிருந்து மருத்துவக் கல்வியையும், மருத்துவ அறிவையும் முழுமையாகப் பறிப்பதுதான். நம்மை மீண்டும் அவர்களிடம் கைகட்டி நிற்கும் நிலைக்குத் தள்ளுவதற்கான முயற்சியாகவே இதைப் பார்க்கிறேன். இம்முறை இந்தப் போராட்டம் தொய்வின்றித் தொடர்ந்து நடைபெற வேண்டும்.

ஆண்ட்ரியா: இது தான் என் முதல் போராட்டம். கடந்த ஒரு வாரமாக நான் அனைத்தையும் கவனித்துக்கொண்டே இருக்கிறேன். மாணவர்கள் போராட்டம் எங்கோ ஒரு இடத்தில் நடக்கிறது என்றாலும் நாம் இங்கு மிகவும் உணர்வுபூர்வமாக இருக்கிறோம்.

எனக்கு மிகவும் பிடித்த ரவீந்திரநாத் தாகூரின் கவிதையிலிருந்து சில வரிகளை பகிர்ந்து கொள்கிறேன். “எங்கு மனது அச்சமின்றி இருக்கிறதோ, எங்கு தலை நிமிர்ந்து நிற்கிறதோ, எங்கு அறிவு அனைவருக்கும் விலையின்றிச் சுதந்திரமாகக் கிடைக்கிறதோ... அந்தச் சுதந்திர சொர்க்கத்தில், என் தந்தையே, என் தேசம் விழித்தெழட்டும்”. அறிவு அனைவருக்கும் விலையின்றி கிடைக்கவேண்டும். அறிவு என்பது நமது பிறப்புரிமை. மாணவர்களோடு எப்போதும் துணையாக நிற்பேன்.

அமீர்: ஜனநாயகத்தை காப்பாற்ற ஒரு சிறிய கூட்டம் போராடிக்கொண்டிருக்கும் சூழலில், ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை காப்பாற்ற ஒரு பெரிய கூட்டம் போராடிக் கொண்டிருக்கிறது. நீட்டை ஒழிப்பதற்கான ரகசியம் தங்களிடம் இருப்பதாக கூறியவர்களும் , அனிதா மரணத்திற்கு ஆறுதல் தெரிவிக்க அவரின் வீட்டுக்குச் சென்றவர்களும் அதிகாரத்தில் இருந்தார்கள், இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் இருவரும் தீர்வை கொண்டுவரமாட்டார்கள்.

நீட் தேர்வுக்கு எதிராக அரசியல்வாதிகள் ஏதேனும் நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புவது முற்றிலும் ஏமாற்று வேலை. கோடிக்கணக்கான உறுப்பினர்களை வைத்துள்ளதாகக் கூறும் எந்தவொரு அரசியல் கட்சியும், இந்த மாணவர் போராட்டத்திற்கு ஆதரவாக மக்களை அணிதிரட்ட முன்வருவதில்லை. அவர்களுக்கு அரசியல் என்பது வெறும் பிழைப்புவாதமாக மட்டுமே இருக்கிறது.

தமிழகம் சிந்திக்கக் கூடிய கூட்டம் என்ற பெயர் எல்லாம் போய்விட்டது. அந்தக் கூட்டம் எல்லாம் திரையரங்கில் நிற்கிறது. மக்களைத் தொடர்ந்து சிந்திக்கவிடாமல், மதம், சாதி அல்லது கவர்ச்சிகரமான பிற விஷயங்களை வைத்துத் திசைதிருப்பும் வேலைகள் நடந்து கொண்டிருக்கின்றன.

தெருக்குரல் அறிவு: நீட் தேர்வை ரத்து செய்யவேண்டும், நீட் வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்று மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகவேண்டும் என நாடு முழுவதும் இளைஞர்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். இது வெறும் நீட்டுக்கு எதிரானது அல்ல. இங்கு அடிப்படை கல்வியிலேயே பிரச்சனை உள்ளது.

ஒருவருக்குள் இருக்கும் திறமையை வளர்த்தெடுக்கும் கல்வி அமைப்பு இங்கு இல்லை. இதனால்தான் மாணவர்களுக்கு பாடத்தை, ஆசிரியர்களை, தேர்வை பார்த்து பயம், குழப்பம் ஏற்படுகிறது. இந்த குழப்பத்திற்குத்தான் பெற்றோர்கள் கட்டணம் செலுத்துகின்றனர். சமூகமே சமமாக இல்லை. சமமாக இல்லாத சமூகத்தில் எல்லோருக்கும் எப்படி சமமான தேர்வு இருக்கும்?.

அன்று நான் தலைமைச் செயலகம் முன்பு போராடியபோது என்னை உள்ளே அழைத்துப் பேசினார்கள். நான் முதல்வர் விஜய்யை சந்திக்கவில்லை. அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவைதான் சந்தித்தேன். அவர், "நீட் தேர்வை ரத்து செய்வது நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை இருந்தால் தான் முடியும். நீங்கள் ஏன் தேவையில்லாமல் இந்த போராட்டத்தில் இறங்கினீர்கள்” என எனக்கு அறிவுரை செய்து அனுப்பினார்.

சிஜேபி போராட்டத்துக்கு ஆதரவாக வெற்றிமாறன் முதல் அமீர் வரை பேசியது என்ன?
டெல்லியில் போராட்டம் தீவிரம்: காந்தி சமாதியில் திரண்ட இண்டியா கூட்டணி எம்.பி.க்கள்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in