

சென்னை: பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர்கள் நியமனம் தொடர்பாக விரைவில் அறிவிப்பு வெளியாகும் என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பி.விஸ்வநாதன் தெரிவித்தார்.
தமிழகத்தில் உள்ள அரசு பொறியியல் கல்லூரிகள், அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் வரும் 2026-27-ம் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை தொடர்பாக உயர்கல்வித் துறை அமைச்சர் பி.விஸ்வநாதன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
சென்னையில் உள்ள கல்லூரிக் கல்வி ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் உயர்கல்வித் துறை செயலர் வி.அருண் ராய், கல்லூரிக்கல்வி ஆணையர் இ.சுந்தரவல்லி, தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் எஸ்.விசாகன், தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கை செயலர் ஆர்.புருஷோத்தமன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் விஸ்வநாதன் கூறியதாவது: பொறியியல் படிப்பில் சேர மாணவர்கள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர். கலந்தாய்வு குறித்த அறிவிப்பு ஜூன் 29-ம் தேதி வெளியிடப்படும்.
பல்வேறு பல்கலைக்கழகங் களில் துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. இதுகுறித்து முதல்வருடன் ஆலோசிக்க உள்ளேன். துணைவேந்தர் நியமனம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும்.
துணைவேந்தர்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். அரசுகலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள முதல்வர் பணியிடங்களும் நிரப்பப்படும். அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கைக்கு நன்கொடையோ, லஞ்சமோ பெறக்கூடாது.
உயர்கல்வித் துறையின் செயல்பாடுகள் வெளிப்படையாக இருக்கும். மக்களின் உணர்வுகளுக்கு சாதகமாகத்தான் துறையின் எந்த முடிவுகளும் எடுக்கப்படும். மாநில உரிமைகளை ஒருபோதும் விட்டுத்தர மாட்டோம். தமிழகம் எப்போதும் தலைநிமிர்ந்து நிற்கும்.
‘நான் முதல்வன்’ தொடருமா?
முந்தைய அரசு கொண்டு வந்த ‘நான் முதல்வன்’ திட்டம் தொடருமா என்று கேட்கிறீர்கள். எங்களுக்கென்று தனித் திட்டங்கள் உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.
சென்னை பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம் உட்பட தமிழகத்தில் மொத்தம் 16 பல்கலைக்கழகங்களில் துணைவேந்தர் பதவி காலியாக இருப்பது குறிப்பிடத்தக்கது.