

சென்னை: மாநிலங்களவைத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. தமிழகத்தில் ஒரு இடத்துக்கான தேர்தலுக்கு 2 சுயேச்சைகள் மனு தாக்கல் செய்தனர்.
நாடு முழுவதும் மாநிலங்களவை எம்.பி.க்கள் 24 பேரின் 6 ஆண்டு பதவிக் காலம் 2026 ஜூன், ஜூலையில் முடிவடைகிறது. இதனால், அந்த இடங்களுக்கு ஜூன் 18-ம் தேதி தேர்தல் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அது மட்டுமின்றி, தமிழகத்தில் சி.வி.சண்முகம் உட்பட 3 பேர் மாநிலங்களவை எம்.பி. பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால், 3 இடங்களுக்கு அதே நாளில் இடைத் தேர்தல் நடத்தப்படுகிறது.
இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு நேற்று (ஜூன் 1) வெளியான நிலையில், வேட்புமனு தாக் கலும் தொடங்கியுள்ளது. தமிழகத்தில் தேர்தல் நடத்தும் அதிகாரி தேன்மொழியிடம் 2 சுயேச்சை வேட்பாளர்கள் முதல்நாளான நேற்று மனு தாக்கல் செய்தனர்.
அதில் ஒருவர் அனைத்து தேர்தல்களிலும் போட்டியிட மனு தாக்கல் செய்யும் மேட்டூரைச் சேர்ந்த கு.பத்மராஜன். இது இவர் தாக்கல் செய்யும் 255-வது மனு. அவருடன் அக்னி ஆழ்வார் என்பவரும் மனு தாக்கல் செய்துள்ளார்.
இருவரும் எம்எல்ஏக்கள் முன்மொழிவை வழங்கவில்லை. மாநிலங்களவை எம்.பி.யாக தேர்வு செய்யப்படும் ஒருவருக்கு 34 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 8-ம் தேதி வரை மனு தாக்கல் செய்யலாம். மனுக்கள் பரிசீலனை 9-ம் தேதி நடைபெறும். மனுவை திரும்ப பெற 11-ம் தேதி கடைசி நாள். போட்டி இருக்கும் பட்சத்தில், ஜூன் 18-ம் தேதி காலை 9 முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறும். அன்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.