ஒரு பெண்ணின் தகப்பன் என்ற முறையில்தான் செய்தேன்: சர்ச்சை வீடியோவுக்கு அமைச்சர் விஸ்வநாதன் வருத்தம்

ஒரு பெண்ணின் தகப்பன் என்ற முறையில்தான் செய்தேன்: சர்ச்சை வீடியோவுக்கு அமைச்சர் விஸ்வநாதன் வருத்தம்
Updated on
1 min read

சென்னை: “ஒரு பெண்ணின் தகப்பன் என்கிற முறையில், மனிதாபிமான உணர்வோடு நான் செய்த முதலுதவி தவறாகச் சித்தரிக்கப்படுகிறது” என்று உயர்கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன் வருத்தம் தெரிவித்துள்ளார்.

கடந்த 21-ஆம் தேதி, முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி மதுரை மேலூரில் அரசு பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்ற விழிப்புணர்வு மாரத்தான் போட்டி நடைபெற்றது. இந்நிகழ்வைத் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் தொடங்கி வைத்தார்.

அப்போது மேடையில் தவெக பெண் நிர்வாகி ஒருவருடன் அமைச்சர் சினிமா பாடலுக்கு நடனமாடிய வீடியோ வெளியாகி சர்ச்சையைக் கிளப்பியது. தவிர மாரத்தான் போட்டி நிறைவடைந்த பிறகு, அதில் பங்கேற்ற பள்ளி மாணவிகள், சிறுமிகள் கடும் வெயில் காரணமாக ஓரிடத்தில் இளைப்பாறிக் கொண்டிருந்தனர்.

அப்போது அங்கு வந்த அமைச்சர் விஸ்வநாதன், சோர்வாக இருந்த மாணவிகளின் கால்களைப் பிடித்துவிட்டார். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி, பெரும் விவாதத்தையும் அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக அமைப்புகளின் கடுமையான கண்டனங்களையும் சந்தித்தது.

தவறான நோக்கத்தில் சித்தரிப்பு

இந்தத் தொடர் சர்ச்சைகளுக்கு விளக்கம் அளித்து அமைச்சர் விஸ்வநாதன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதுரையில் விழிப்புணர்வு மாரத்தான் போட்டியில் திரளான மாணவ, மாணவிகள் பங்கேற்றனர்.

சுமார் 4 கிலோ மீட்டர் தூரம் ஓடியதாலும், கடும் வெயிலின் தாக்கத்தினாலும் சில மாணவிகள் களத்திலேயே சோர்வடைந்து மயக்க நிலைக்குச் சென்றனர்.

அப்போது அவர்களுக்கு ஒரு பெண்ணின் தகப்பன் என்ற முறையிலும், மனிதாபிமான உணர்வோடும் நான் செய்த முதலுதவிகள் தவறான நோக்கத்தில் சித்தரிக்கப்படுவது மிகுந்த வேதனையளிக்கிறது.

இருப்பினும், ஏதோ ஒருவகையில் எனது அணுகுமுறை தவறாகப் புரிந்து கொள்ளப்படும் நிலை ஏற்பட்டதற்காக எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

ஒரு பெண்ணின் தகப்பன் என்ற முறையில்தான் செய்தேன்: சர்ச்சை வீடியோவுக்கு அமைச்சர் விஸ்வநாதன் வருத்தம்
மத்திய அரசுடன் இணக்கமாகச் செல்ல தமிழக அரசு முடிவெடுத்தது வரவேற்கத்தக்கது: நிர்மலா சீதாராமன் கருத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in