

சென்னை: சட்டப்பேரவையில் இன்று வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய தொடங்கிய அமைச்சர் வினோத், முதல்வர் விஜய்யை தொடர்ந்து புகழ்ந்து பேசிக் கொண்டிருந்ததால் திமுக உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர். இதனையடுத்து சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் குறுக்கிட்டு, “வேளாண் பட்ஜெட்டை மட்டும் படிக்குமாறு” அமைச்சரிடம் அறிவுறுத்தினார்.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், இன்று வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண் பட்ஜெட்டை துறை அமைச்சர் வினோத் தாக்கல் செய்தார்.
வேளாண் பட்ஜெட்டை ‘உழுவார் உலகத்தார்க்கு ஆணி அஃதாற்றாது எழுவாரை எல்லாம் பொறுத்து’ என்ற திருக்குறளுடன் தாக்கல் செய்ய தொடங்கிய அமைச்சர் வினோத், முதல்வர் விஜய்யை புகழ்ந்து பேச ஆரம்பித்தார்.
அப்போது அவர், “பணநாயகத்தை தோற்கடித்த பாமரனின் ஜனநாயகன் நீங்கள். திரை மன்றங்களில் மட்டுமல்ல, சட்டப்பேரவைக்கும் நாயகன் நீங்கள் தான். உயர்ந்த எண்ணங்களை விதையாக்கி, ஊழலை களை எடுத்து, சமத்துவம் எனும் செடி வளர்த்து, மக்களாட்சி எனும் மரத்தை பிடித்து நிற்கும் கோட் சூட் போட்ட விவசாயி நீங்கள்.
விசில் என்பது ஒலி அல்ல, அது பாமரர்களின் மொழி. விசில் தனியாக ஒலித்தாலும் கம்பீரம் குறையாது. அணியோடு சேரும் போது அகம்பாவம் இருக்காது. ஊழலை ஒழிக்க உங்களை விட்டால் ஒருவரும் இல்லை முதல்வரே. முதல்வர் விஜய் பேசுவதுதான் தலைப்பு செய்தி அல்லது அவரைப் பற்றி பேசுவதுதான் தலைப்பு செய்தி” என்றார்.
இவ்வாறு அமைச்சர் வினோத் தொடர்ந்து முதல்வர் விஜய்யை புகழ்ந்து பேசிக்கொண்டிருந்ததால், திமுக உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர்.
அப்போது குறுக்கிட்ட சபாநாயகர், “வேளாண் நிதிநிலை அறிக்கையை மட்டும் விரிவாக படிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்றார். இதனை தொடர்ந்து அமைச்சர் வினோத், வேளாண் பட்ஜெட்டை தாக்கல் செய்ய ஆரம்பித்தார்.