கடலோர மாவட்டங்களின் வளர்ச்சிக்காக ரூ.18 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் மத்திய அரசிடம் பரிந்துரை: அமைச்சர் எ.வ.வேலு தகவல்

கடலோர மாவட்டங்களின் வளர்ச்சிக்காக ரூ.18 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் மத்திய அரசிடம் பரிந்துரை: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
Updated on
1 min read

சென்னை: தமிழக கடலோர மாவட்டங்களின் வளர்ச்சிக்காக மத்திய அரசின் சாகர்மாலா 2.0 திட்டத்தின் கீழ், ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் 98-வது வாரியக் கூட்டம், அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் சென்னை தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் அவர் பேசிய தாவது: கடல்சார் கட்டமைப்புகளை உருவாக்கி, சிறுதுறைமுகங்களை மேம்படுத்தி, தமிழகத்தை முன்னணி கடல்சார் மாநிலமாக உருவாக்கும் நோக்கில், கடந்த 5 ஆண்டுகளில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

குறிப்பாக கடந்த 40 ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாத கடலூர் துறைமுகம் தற்போது தனியார் துறைமுக இயக்கு நிறுவனம் மூலம் மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. நாகப்பட்டினத் திலிருந்து இலங்கையின் காங்கேசன்துறைக்கு இயக்கப்படும் பன்னாட்டுப் பயணிகள் படகு போக்குவரத்து கடந்த 2023-ல் தொடங்கப்பட்டு வெற்றிகரமாக இயக்கப்பட்டு வருகிறது.

ராமேசுவரத்தில் அக்னிதீர்த்தம் மற்றும் பாம்பன் பகுதிகளில் மிதக்கும் தோணித்துறைகள் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ராமேசுவரத்திலிருந்து இலங்கையின் தலைமன்னாருக்கு பயணிகள் சேவையை தொடங்க, ராமேசுவரத்தில் பன்னாட்டு வசதியுடைய பயணிகள் முனையம் மற்றும் தோணித்துறை அமைக்க மத்திய அரசின் நிதியுதவி கோரி கருத்துரு அனுப்பப்பட்டுள்ளது.

சாகர்மாலா 2.0 திட்டம்: கடலூரில் மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களிலுள்ள சரக்குகளை கையாள புதிய பசுமை வளத்துறைமுகம் அமைக்கவும், தேவனாம்பட்டினம் அருகே உள்ள நூற்றாண்டு பழமையான துறைமுக அலுவலர் குடியிருப்பு வளாகத்தை கடல்சார் பாரம்பரிய அருங்காட்சியக வளாகமாக மாற்றுவதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

மேலும் தமிழக கடலோர மாவட்டங்களின் வளர்ச்சிக்காக, மத்திய அரசால் தொடங்கப்பட்ட சாகர்மாலா 2.0 திட்டத்தின் கீழ், நிதியுதவி கோரி ரூ.18 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அமைச்சர் எ.வ.வேலு பேசினார்.

இக்கூட்டத்தில் பொதுப்பணித்துறை செயலர் மங்கத்ராம் சர்மா, நெடுஞ்சாலைகள் துறை செயலர் இரா.செல்வராஜ், தமிழ்நாடு கடல்சார் வாரியத்தின் முதன்மை செயலர் தி.ந.வெங்கடேஷ், மாநில துறைமுக அலுவலர் ம.அன்பரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

கடலோர மாவட்டங்களின் வளர்ச்சிக்காக ரூ.18 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் மத்திய அரசிடம் பரிந்துரை: அமைச்சர் எ.வ.வேலு தகவல்
தொடர்ந்து சரியும் தங்கம், வெள்ளி விலை - இன்றைய நிலவரம் என்ன?

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in