

சென்னை: அதிநவீன வசதி மற்றும் தரமான பயண அனுபவத்தை வழங்க குளிர்சாதன பிரீமியம் பேருந்து சேவையை போக்குவரத்துத் துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் தொடங்கிவைத்தார்.
மாநகர் போக்குவரத்துக் கழகம் தற்போது சாதாரண (விடியல் பயணம்), விரைவு, சொகுசு, குளிர்சாதன மற்றும் மின்சாரப் பேருந்து சேவைகள் மூலம் தினமும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு சேவை செய்து வருகிறது.
எனினும் சென்னை மாநகரில் பணிபுரியும் அலுவலகப் பயணிகள், தினசரி பயணிகள் சிலர் அதிக வசதியுடனும் விரைவான பயண சேவையை விரும்புகின்றனர்.
மேலும் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்து பயணிகளிடையே சேவைகள் குறித்த ஆய்வு ‘சென்னை ஒன்’ செயலி மூலம் மேற்கொள்ளப்பட்டபோது, குறித்த நேரப் பயணம், சொகுசான மற்றும் உறுதி செய்யப்பட்ட இருக்கை வசதி, கூட்ட நெரிசல் இல்லா பயணம், நம்பகமான மற்றும் பாதுகாப்பான பயணம், மின்சாரப் பேருந்துகள் போன்றவை குறித்து கருத்துகள் கேட்டறியப்பட்டன.
இதைக் கருத்தில் கொண்டு, தனியார் வாகனப் பயன்பாட்டைக் குறைக்கவும், தனியார் வாகனங்களிலிருந்து பொதுப் போக்குவரத்துக்கு மாறுவதை ஊக்குவிக்கவும், நெரிசல் மற்றும் கார்பன் உமிழ்வைக் குறைக்கவும், பொதுப் போக்குவரத்துக் கான ஈர்ப்பை அதிகரிக்கும் வகையிலும், சென்னை மாநகரின் முக்கிய மற்றும் அதிக பயணிகள் பயன்பாடுள்ள வழித்தடங்களில் பிரீமியம் பேருந்து சேவையை மாநகர் போக்குவரத்துக் கழகம் அறிமுகப்படுத்த திட்டமிட்டு, முதற்கட்டமாக 40 கி.மீ.க்கும் அதிகமான நீளம் கொண்ட கிளாம்பாக்கம் முதல் திருவான்மியூர் வரை P91 மற்றும் கோயம்பேட்டில் இருந்து சிறுசேரி ஐடி பூங்கா வரை P570S என இரு வழித்தடங்களில் 5 பேருந்துகள் பரீட்சார்த்த முறையில் இயக்கப்படவுள்ளது.
இந்த தாழ்தள குளிர்சாதன மின்சாரப் பேருந்துகளைக் கொண்ட பிரீமியம் பேருந்து சேவையை நேற்று போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர் காணொலிக் காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இந்த பிரீமியம் பேருந்து சேவையின் குறைந்தபட்ச கட்டணம் ரூ.50 முதல் அதிகபட்சம் ரூ.150 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய பேருந்துகளில் 5 நாட்களுக்கு முன்னதாகவே ஆன்லைன் மூலம் கட்டணம் செலுத்தி இருக்கைகளை முன்பதிவு செய்துகொள்ளும் வசதி இருக்கும். மேலும் சொகுசான அதிக இட வசதி கொண்ட இருக்கைகள், ஜிபிஎஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பேருந்தின் நிகழ்நேர பயணத்தை கண்காணித்தல், இலவச வைஃபை, மொபைல், லேப்டாப் சார்ஜிங், சிசிடிவி மற்றும் அவசர அழைப்பு வசதி, மாற்றுத் திறனாளி பயணிகள் எளிதாகப் பயணம் மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த பேருந்தில் நடத்துநர் இருக்க மாட்டார்கள், நின்று கொண்டு பயணிக்கவும் அனுமதியில்லை. இந்நிகழ்ச்சியில், மாநகர் போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குநர் பிரபுசங்கர், இணை மேலாண் இயக்குநர் ராம. சுந்தரபாண்டியன், பொது மேலாளர்கள், உயர் அலுவலர்கள் மற்றும் தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.