

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே பிளஸ் 2 மாணவி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சுப்புராஜ் - காளீஸ்வரி தம்பதியரின் மகள் பிரதிபா (17), தற்போது பிளஸ் 2 தேர்வை எழுதி வந்தார்.
நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இதுகுறித்த புகாரை பெறாமல், மாணவியின் பெற்றோரை குளத்தூர் காவல் நிலையம் மற்றும் விளாத்திகுளம் மகளிர் காவல் நிலைய போலீஸார் அலைக்கழித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே, நேற்று மாலை வேடநத்தம் காட்டுப்பகுதியில் காயங்களுடன் மாணவியின் உடல் கிடந்தது. இதையடுத்து சுப்புராஜ் மற்றும் ஊர் பொதுமக்கள் ராமேசுவரம் சாலையில் வேடநத்தம் பேருந்து நிறுத்தம் அருகே போலீஸாரைக் கண்டித்து மறியலில் ஈடுபட்டனர்.
எம்எல்ஏ மார்க்கண்டேயன், எஸ்.பி. மதன் ஆகியோர் பேச்சு நடத்தினர். ஆனாலும், இரவு 9 மணியை கடந்தும் போராட்டம் நீடித்தது.