

புதுக்கோட்டையில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற அமைச்சர்கள் செங்கோட்டையன் மற்றும் முகமது பர்வேஸ்.
திருச்சி: முதல்வர் விஜய்யிடம் இரட்டை நிலைப்பாடு எதுவும் இல்லை எனவும், மக்கள் நலனுக்காகத் தான் பிரதமர் மோடியுடன் அவர் இணைந்து பணியாற்றுகிறார் எனவும் வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.
திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை பணிகள் குறித்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் 20 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிக்காக 1,500 நில அளவையர்கள் தற்காலிகமாக பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாக மழையால் எந்த பாதிப்பும் ஏற்படாமல், மக்களின் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த திமுக ஆட்சியில் ரூ.4 ஆயிரம் கோடியில் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால் பணிகளில் 40 சதவீதத்தை கூட அவர்கள் முடிக்கவில்லை. தவெக அரசு பொறுப்பேற்ற 4 மாதங்களில் இப்பணிகள் விரைந்து முடிக்கப்பட்டுள்ளன என்றார்.
முன்னதாக திருச்சி விமான நிலையத்தில் கூறும்போது, ‘முதல்வர் விஜய் குறித்து திமுகவினர் தொடர்ந்து அவதூறாக பேசி வருகின்றனர். அரசியலில் நாகரீகம் கடைப்பிடிப்பது முக்கியமான ஒன்று. முன்னாள் முதல்வர் பழனிசாமியும் அப்படித்தான் பேசி வருகிறார். பழனிசாமியும், திமுகவும் வேறு அல்ல. இருவருமே அரசியல் களத்தில் ஒன்றுதான்’ என்றார்.
தொடர்ந்து, புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் நேற்று நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது,’ சீரமைப்பு பணிகள் காரணமாக உள்ளாட்சித் தேர்தல் தள்ளிப்போடப்பட்டுள்ளதே தவிர அச்சத்தின் காரணமாக அல்ல. முதல்வர் விஜய் இரட்டை நிலைப்பாட்டில் அல்லாமல், தனது கொள்கையில் உறுதியுடன் இருக்கிறார். மக்கள் நலனுக்காகத் தான் பிரதமர் மோடியுடன் அவர் இணைந்து பணியாற்றுகிறார். சென்னை விமான நிலையத்தை தனியார் வசம் ஒப்படைப்பது குறித்து தற்போது கருத்து தெரிவிக்க இயலாது’ என்றார்.
விராலிமலையில் விஜயபாஸ்கர்?
விராலிமலையில் நடைபெற்ற அரசு விழாவில் அமைச்சர் செங்கோட்டையன் பேசும்போது, “முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மீண்டும் களத்தில் நிற்கப் போகிறார். அத்துடன் அவர் வெற்றி பெற்று முதல்வர் விஜய்க்கு பின்னால் இருந்து பணியாற்றுவார்” என்றார். அதன்பின், “விராலிமலையில் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் மீண்டும் போட்டியிடப் போகிறாரா?” என செய்தியாளர்கள் கேட்டதற்கு, “நான் தேர்தலுக்காக சொல்லவில்லை, பொதுவாகத் தான் கூறினேன்” என பதிலளித்தார்.