

கரூர் வெங்கக்கல்பட்டியில் உள்ள சமூக நீதி மாணவியர் விடுதியில் அமைச்சர்கள் ஆய்வு.
கரூர்: “சமூக நீதி விடுதிகளில் பற்றாக்குறை உள்ள இடங்களில் பணியாளர்கள் முழுமையாக நியமனம் செய்யப்படுவார்கள் என பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சம்பத்குமார் தெரிவித்துள்ளார்.
கரூரில் இன்று (செப்.10-ம்) வெங்கக்கல்பட்டியில் உள்ள சமூக நீதி கல்லூரி மாணவியர் விடுதி (எம்பிசி), அருகம்பாளையம் மாணவர் விடுதி (பிசி), மல்லம்பாளையம் சமூக நீதி கல்லூரி மாணவர் விடுதி (எம்பிசி), தாந்தோணிமலை சமூக நீதி மாணவியர் விடுதி (பிசி) ஆகியவற்றில் ஆட்சியர் சி.முத்துக்குமரன் தலைமையில் தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வே.சம்பத்குமார் ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின் போது பால் மற்றும் பால் வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் விஜயலட்சுமி, கிருஷ்ணராயபுரம் எம்எல்ஏ சத்யா, மாவட்ட வருவாய் அலுவலர் கு.விமல்ராஜ், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் முகமமது பைசல், தவெக மேற்கு மாவட்ட செயலாளர் வி.பி.மதியழகன் உடனிருந்தனர்.
விடுதியில் வழங்கப்படும் உணவினை அமைச்சர்கள் வே.சம்பத்குமார், விஜயலட்சுமி, எம்எல்ஏ சத்யா ஆகியோர் மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டனர். கழிவறை, குளியறைகளை பார்வையிட்டு மாணவர்களிடம் குறைகளை கேட்டறிந்தனர். இன்று உணவு வழங்குவதுப் போலவே மற்ற நாட்களிலும் வழங்கப்படுகிறதா, உணவின் தரம், வேறு தேவைகள் ஏதும் உள்ளதா என மாணவர்களிடம் கேட்டறிந்தனர்.
தொடர்ந்து, தாந்தோணிமலை சமூக நீதி மாணவியர் விடுதியில் ஆட்சியர் சி.மு த்துக்குமரன் தலைமையில் அமைச்சர் சம்பத்குமார் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட உணவை சாப்பிட்டு பார்த்து இட்லி நன்றாக இருப்பதாகவும், ஆனால் சற்று கடினமாக இருப்பதாகவும் தெரிவித்தார். மற்ற நாட்களிலும் சிற்றுண்டி இதுபோல தான் வழங்கப்படுகிறதா என்று கேட்டறிந்தார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் வே.சம்பத்குமார்: “தமிழகத்தில் இதுவரை 15-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் சமூக நீதி விடுதிகளில் ஆய்வு மேற்கொண்டுள்ளோம். வெங்கக்கல்பட்டியில் உள்ள கல்லூரி மாணவி விடுதியில் மாணவிகள் சமையலர் மீது புகார் தெரிவித்திருந்தனர். சமையலர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தவறுகள் தொடர்ந்தால் மேல்நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆய்வில் உணவு மட்டுமின்றி சுகாதாரம், மாணவ, மாணவிகளுக்கான அடிப்படை வசதிகளை ஆய்வு செய்தோம். மாணவ, மாணவிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டியது அரசின் கடமை. அதனை உணர்ந்து வருங்காலத்தில் அவை மேம்படுத்தப்படும். பள்ளி மாணவர்களுக்கு ரூ.1,400-ஆக இருந்த உணவுப்படி ரூ.1,800 ஆகவும், கல்லூரி மாணவர்களுக்கு ரூ.1,500 ஆக இருந்த உணவுப்படி ரூ.2,000 ஆவும் உயர்த்தப்பட்டுள்ளது.
மாணவர்களின் தேவைகளை கேட்டறிந்து நிறைவேற்றப்படும். உணவு மட்டுமின்றி சுகாதாரத்திற்கும் முக்கியத்துவம் வழங்கப்படும். பணியாளர் பற்றாகுறை உள்ள இடங்களில் முழுமையாக நிரப்பப்படும்.
பள்ளி விடுதிகளில் தேவைக்கு குறைவாகவே மாணவர்கள் உள்ளனர். இவற்றை கல்லூரி விடுதிகளாக மாற்றவும், தரம் உயர்த்தவும் பணிகள் மேற்கொள்ளப்படும். கூடுதலாக விடுதி தேவைப்படும் இடங்களில் இடம் தேர்வு செய்யப்படும். வெங்கக்கல்பட்டி மாணவர் விடுதியில் இருந்து கல்லூரிக்கு பேருந்து இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அரசு பதவியேற்ற 100 நாட்களில் சின்ன, சின்ன விஷயங்களிலும் கவனம் செலுத்தி செயல்படுத்தி வருகிறோம். தவெகவின் நோக்கம் மக்களுக்கு உண்டான தேவைகளை செய்து தருகிறோம். இடைத்தேர்தல்களில் தவெக வெற்றி 100 சதவீதம் உறுதி. பதவியேற்ற 100 நாட்களில் நிறைய மாற்றங்கள் தெரிவதாக மக்கள் சொல்கின்றனர். வெற்றியின் வாசலில் நிற்கிறோம்” என்று அமைச்சர் சம்பத்குமார் கூறினார். முன்னதாக மாவட்ட விளையாட்டு மைதானத்தில் முதல்வர் கோப்பைக்கான 2-ம் நாள் விளையாட்டு போட்டிகளை அமைச்சர்கள் விஜயலட்சுமி, சம்பத்குமார் தொடங்கி வைத்தனர்.