

வேலூர் விஐடி பல்கலை.யில் நேற்று தொடங்கிய 3-வது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப மாநாட்டில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், விஐடி வேந்தர் கோ.விசுவநாதன், அமெரிக்காவின் எம்ஐடி கல்வி நிறுவனப் பேராசிரியர் மவுங்கி பவெண்டி, விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் உள்ளிட்டோர்.
வேலூர்: தமிழக அரசு உயர்கல்வி, ஆராய்ச்சியை மேம்படுத்தி வருவதாக போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தெரிவித்தார். வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் 3-வது சர்வதேச நானோ அறிவியல் மற்றும் நானோ தொழில்நுட்ப 4 நாள் மாநாடு நேற்று தொடங்கியது.
இதில் பங்கேற்ற அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேசியதாவது: நானோ தொழில்நுட்பத்தில் முன்னிலை வகிக்கும் நாடுகள்தான், வருங்கால தொழில்துறையில் முன்னிலை வகிக்கும். திறன்மிகு பேட்டரிகள், சூரிய ஒளி தொழில்நுட்பங்கள், அடுத்த தலைமுறை ஹைட்ரஜன் அமைப்புகளில் நானோ தொழில்நுட்பம் முக்கியப் பங்காற்றும்.
திராவிட மாடல் அரசு சமூக நீதியைப் பொருளாதார வளர்ச்சியுடன் இணைக்கிறது. தமிழகத்தை நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2-ம் இடத்துக்கு கொண்டு சென்றுள்ளது. விலையில்லா பேருந்து பயணத் திட்டம் மூலம் தற்போது தினமும் 57.81 லட்சம் பெண்கள் பயனடைகின்றனர்.
இதுவரை 841 கோடி பயணங்களை மேற்கொண்டுள்ளனர். இந்த திட்டத்தை ஆந்திரா, தெலங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களும் பின்பற்றுகின்றன. நான் முதல்வன், புதுமைப் பெண், தமிழ்ப் புதல்வன் உள்ளிட்ட திட்டங்களால் 4.18 லட்சம் மாணவிகளும், 3.28 லட்சம் மாணவர்களும் பயனடைகின்றனர்.
இதன்மூலம் உயர்கல்வி கிடைப்பதுடன், இடைநிற்றல் குறைந்துள்ளது. திராவிட மாடல் அரசு உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சியை மேம்படுத்தும் நடவடிக்கைகளில் தொடர்ந்து ஈடுபடும். இவ்வாறு அமைச்சர் பேசினார்.விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசும்போது, “இந்த மாநாட்டில் 20 நாடுகளைச் சேர்ந்த 300 பேர் மற்றும் 42 சர்வதேச கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் பங்கேற்றுள்ளனர்.
மேம்பட்ட நானோ பொருட்கள், நானோ எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் குவாண்டம் பொருட்கள், நானோ மருத்துவம், சென்சார்கள் மற்றும் பயோசென்சார்கள், ஆற்றல் பொருட்கள் மற்றும் நிலையான தொழில்நுட்பப் பயன்பாடுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் கருத்தரங்குகள், சொற்பொழிவுகள், விவாத அரங்குகள் நடைபெறும். மேலும், ஆராய்ச்சியில் சிறந்து விளங்குபவர்களுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
அண்மையில் வெளியான க்யூ.எஸ். நிலைத்தன்மை பிரிவில் தரவரிசைப் பட்டியலில் இந்திய அளவில் விஐடி 7-ம் இடத்தைப் பிடித்துள்ளது. உலக அளவில் 352-ம் இடத்துக்கு முன்னேறி உள்ளது” என்றார். நோபல் விஞ்ஞானியும், அமெரிக்காவின் எம்ஐடி கல்வி நிறுவனத்தின் பேராசிரியருமான மவுங்கி பவெண்டி பேசும்போது, “நானோ அறிவியலில் புதிய அறிவியல் பண்புகளை கண்டுபிடிப்பது, வேறுபட்ட பயன்பாடுகளுடன் புதிய பொருட்களைக் கண்டுபிடிப்பது மாநாட்டின் நோக்கமாகும்” என்றார்.
நிகழ்வில், விஐடி துணைத் தலைவர் சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி, துணைவேந்தர் வி.எஸ்.காஞ்சனா பாஸ்கரன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், நானோ அறிவியல் மைய இயக்குநர் நிர்மலா கிரேஸ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.