அறநிலையத் துறை டெண்டர்கள் அனைத்தும் இனி ஆன்லைனில் மட்டுமே நடைபெறும்: அமைச்சர் ரமேஷ் தகவல்

அறநிலையத் துறை டெண்டர்கள் அனைத்தும் இனி ஆன்லைனில் மட்டுமே நடைபெறும்: அமைச்சர் ரமேஷ் தகவல்
Updated on
2 min read

சென்னை: ‘அறநிலையத் துறையின் அனைத்து டெண்டர்களும் இனி ஆன்லைனில் மட்டுமே நடைபெறும், ஜிஎஸ்டி, பான் இல்லாதவர்கள் டெண்டர்களில் பங்கேற்க முடியாது’ என அமைச்சர் ரமேஷ் தெரிவித்தார்.

சென்னை நுங்கம்பாக்கத் தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அமைச்சர் ரமேஷ் நேற்று கூறியதாவது: அறநிலையத் துறையின் கீழ் உள்ள அனைத்து கோயில் களிலும் ஒப்பந்தப்புள்ளி கோருவது முதல் ஏலம் விடுவது வரை அனைத்தும் ஆன்லைனிலேயே நடைபெறும்.

முன்பு கோயிலுக்கு கோயில் மாறுபட்டிருந்த வைப்புத் தொகை இனி தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியாக 1 சதவீதமாகவும், செக்யூரிட்டி தொகை 5 சதவீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

குறைந்த விலையில் கிடைக்கும்

ஜிஎஸ்டி எண் மற்றும் பான்கார்டு இல்லாதவர்கள் டெண்டர்களில் பங்கேற்க முடியாது. டெண்டர் எடுப்பவர்களில் மிகக் குறைந்த விலையை குறிப்பிடுபவருக்கே முன்னுரிமை என்ற நிலை மாற்றப்பட்டு, கூடுதல் வாய்ப்புகள் வழங்கப்படவுள்ளன.

ஒருவர் குறைந்த விலையை குறிப்பிட்டாலும், மற்றவர்களுக் கும் அந்த விலையை மாற்றியமைக்க காலஅவகாசம் வழங்கப்படும்.

இதன்மூலம் கோயிலுக்குத் தேவையான பொருட்கள் மிகக் குறைந்த விலையில் கிடைப்பது உறுதி செய்யப்படும். மேலும், டெண்டர்கள் ஒரு வருக்கே செல்லாமல், இரண்டு மூன்று பேருக்குப் பிரித்து வழங்கும் முறையும் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது.

பொருட்களை சப்ளை செய்வதில் தாமதம், தரம் குறைவு அல்லது அளவு குறைபாடு இருந்தால் கடும் அபராதம் விதிக்கப்படும்.

கோயில்களில் முடி எடுக்கும் டெண்டர்களில், தினமும் எவ்வளவு முடி எடுக்கப்படுகிறது, அதன் எடை மற்றும் தரம் குறித்து அறநிலையத்துறை நேரடி கண்காணிப்பு செய்யும். கோயில் கடைகளில் இனி பிஓஎஸ் கருவிகள் மூலம் மட்டுமே பில் வழங்க வேண்டும்.

கோயில்களில் பணிபுரியும் தூய்மைப் பணியாளர்கள் மற்றும் ஒப்பந்தப் பணியாளர் களுக்கு உரிய ஊதியம், சீருடை, கையுறைகள் மற்றும் தூய்மைப்படுத்தும் கருவிகளை ஒப்பந்ததாரர்கள் கட்டாயம் வழங்க வேண்டும்.

மேலும், ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு என்ன ஊதியம் வழங்கப்படுகிறது என்பதை உறுதிப்படுத்த, அவர்களுக்குக் கட்டாயம் சம்பள சான்று வழங்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

சர்ச்சைக்குகளுக்கு விளக்கம்

ஸ்ரீரங்கம் கோயில் கோபுரப் பணியின்போது காலணி அணிந்து சென்றது குறித்து எழுந்த விமர்சனங்களுக்குப் பதிலளித்த அமைச்சர், ‘‘அந்தப் பகுதி தற்போது முழுமையாக இடிக்கப்பட்டு, கற்களும் ஆணிகளும் சிதறிக்கிடக்கும் கட்டுமானப் பகுதியாக உள்ளது.

அங்கு பணிபுரியும் தொழிலாளர்களே பாதுகாப்பு கருதி காலணி அணிந்துதான் வேலை செய்கிறார்கள். பாதுகாப்பு கருதியே நானும் காலணி அணிந்தேன்’’ என்றார்.

மேலும், ‘‘பழனி நில மோசடி விவகாரத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் தொடர்புடைய அதிகாரிகள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

பொய் செய்தி பரப்புகின்றனர்

அதேபோல், தன் குடும்பத்தினர் நிலம் வாங்கியதாகக் கூறப்படும் புகாரைப் மறுத்த அவர், ‘‘நாங்களே வாடகை வீட்டில்தான் வசிக்கிறோம். ரூ. 2 கோடி கொடுத்து நிலம் வாங்கும் வசதி எங்களிடம் இல்லை. என் புகழைக் கெடுக்கவே திட்டமிட்டு பொய் செய்திகளைப் பரப்புகிறார்கள்’’என்றார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in