

இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ்
மதுரை: “புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தவெகவினருக்கு என்ன தெரியும் என்ற கடந்த கால ஆட்சியாளர்கள் விமர்சனங்களைக் கடந்து மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழாவை முதல்வர் வழிகாட்டுதலின்படி சிறப்பாக நடத்தியுள்ளோம்,” என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மதுரையில் இன்று தெரிவித்தார்.
மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடமுழுக்கு விழா முடிந்த பிறகு கோயிலுக்கு எதிரிலுள்ள புதுமண்டபத்தில் சட்டம் மற்றும் எரிசக்தி துறை அமைச்சர் நிர்மல் குமார், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது அமைச்சர் ரமேஷ், “கடந்த கால ஆட்சியாளர்கள், புதிதாக ஆட்சிக்கு வந்துள்ள தவெகவினருக்கு என்ன தெரியும், இவர்கள் ஆட்சி செய்து விடுவார்களா? என்ற பார்வை இருந்தது. அவற்றைப் பற்றி கவலைப்படாமல் உண்மையாகவே மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்படுகிறோம்.
அதன்படி 3 மாதத்திற்கு முன்பாகவே மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா தொடர்பாக ஆய்வுக் கூட்டம் நடத்தி ஆலோசனை செய்தேன். வீரவசந்தராயர் மண்டபப் பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடிக்க அறிவுறுத்தினேன். தமிழக முதல்வர் வழிகாட்டுதலின்படி குடமுழுக்கு விழாவை சிறப்பாக நடத்தியுள்ளோம்.
குடமுழுக்கு விழாவின்போது மேல்தளத்தில் 9,500 பேருக்குமேல் உட்கார வைக்க முடியாது. அதற்கேற்றவாறுதான் பாஸ்கள் வழங்கியுள்ளோம். பொதுமக்கள் 2 ஆயிரம் பேருக்கும், ரூ.25 கோடி வரை கோயிலுக்கு உபயம் வழங்கிய உபயதாரர்கள், முன்னாள், இந்நாள் அமைச்சர்கள், எம்எல்ஏக்கள், எம்பிக்கள், மாநகராட்சி கவுன்சிலர்கள் ஆகியோர்களுக்கும் பாஸ்கள் வழங்கியுள்ளோம். வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என யாரையும் புறக்கணிக்கவில்லை. அனைத்து துறையினருக்கும் வழங்கியுள்ளோம்.
குடமுழுக்கு விழாவில் ட்ரோன் மூலம் தீர்த்தம் தெளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குடமுழுக்கு விழாவில் காலை 10 மணிக்கு பொது தரிசனத்திற்கு அனுமதி என அறிவித்திருந்தோம். ஆனால் காலை 8.30 மணிக்கே பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதித்துள்ளோம்.
குடமுழுக்கில் பங்கேற்றவர்களுக்கு தண்ணீர், பிஸ்கட் அடங்கிய பை இரண்டரை லட்சம் பேருக்கு வழங்கவுள்ளோம். கோயிலுக்குள் மொபைல் போன்களை பயன்படுத்தக்கூடாது என்பதில் அரசு உறுதியாக உள்ளது. பக்தர்கள் வீடியோ போட்டோ எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மொபைல் போன்களுக்கு ரூ.5 கட்டணம் வசூலிக்க கட்டாயப்படுத்தவில்லை. கோயில் நிர்வாகம் நிதி நிலையைப் பொறுத்து வசூலித்துக் கொள்ளலாம் என அறிவுறுத்தினோம்.
அதன்படி பல கோயில்களில் கட்டணத்தை ரத்து செய்துவிட்டனர். கோயில்கள் சார்பில் யானைகள் வாங்கவில்லை. உயர் நீதிமன்ற உத்தரவுப்படி உபயதாரர்கள் மூலம் யானைகள் வாங்கிக் கொள்ளலாம் என்பதன்படியே கோயில்களுக்கு யானைகள் வாங்கியுள்ளோம். கோயில்களில் பிரசாத விலையை ஏற்றவில்லை. ஏற்கெனவே இருந்த விலைப்பட்டியலின் படியே விற்பனை செய்கிறோம். தனியார் வசமிருந்து பிரசாத விற்பனையை 12 கோயில்களில் துறை மூலம் நடத்துகிறோம். தரமான முறையில் பிரசாதம் வழங்குகிறோம். இதற்கென கூடுதலாக கட்டணம் வசூலிக்கவில்லை.” இவ்வாறு அவர் கூறினார்.