“அமைச்சர் கீர்த்தனா மாணவியிடம் ஒரு சகோதரியைப் போலவே பேசினார்” - அமைச்சர் ராஜ்மோகன்

அமைச்சர் ராஜ்மோகன்

அமைச்சர் ராஜ்மோகன்

Updated on
1 min read

சென்னை: “அரசுப் பள்ளி மாணவியை பார்த்தபோது, தன்னைப் போல ஒருவரைப் பார்த்ததாக தோன்றியதால், ஓர் அக்கா ஸ்தானத்தில்தான் அமைச்சர் கீர்த்தனா பேசினார். இதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது” என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.

அமைச்சர் கீர்த்தனா சமீபத்தில் அரசுப் பள்ளி ஒன்றுக்கு சென்று, மாணவியிடம் ஆங்கிலத்தில் பேசச் சொல்லி நடந்துகொண்ட விதம் பெரும் சர்ச்சையானது. இந்நிலையில், இது குறித்து அமைச்சர் ராஜ்மோகன் செய்தியாளர்களிடம் பேசும்போது, “ஆய்வுப் பணிகள் செய்வது காலங்காலமாக நடைபெறுவது தான். ஒவ்வொரு அமைச்சரும், எம்எல்ஏவும் அவரவர் தொகுதிகளில் பல்வேறு இடங்களுக்குச் சென்று ஆய்வு செய்வது ஒரு மரபுதான்.

இது குறித்து நான் விசாரித்தபோது, அமைச்சர் கீர்த்தனா எந்த ஒரு காணொளியையும் எடுக்கவில்லை. அவரும் தமிழ்வழிக் கல்வியில் படித்தவர்தான். தமிழ்வழியில் படித்து நன்றாக ஆங்கிலம் பேசும் அளவுக்கு தனது தனித்தன்மையை வளர்த்துக் கொண்ட ஓர் அரசியல் ஆளுமைதான்.

மற்றபடி ஊடகங்கள் எடுத்த காணொலிதான் சர்ச்சையாகிவிட்டது. இந்த ஆய்வுகள் என்பது ஒரு மரபுதான். எந்தவொரு பள்ளியிலும் மாணவர்களது ஆங்கிலப் புலமையையோ அல்லது அவர்களது பின்புலம் பற்றியோ எந்தவொரு அரசியல் காரணங்களுக்காக யாருமே கேட்கக் கூடாது.

அந்த மாணவியைப் பார்த்தபோது, தன்னைப் போல ஒருவரை பார்த்ததாக தோன்றியதால், ஓர் அக்கா ஸ்தானத்தில்தான் அமைச்சர் கீர்த்தனா பேசினார். இதை யாரும் தவறாக எடுத்துக் கொள்ளக் கூடாது.

சட்டம் ஒழுங்கு குறித்து சட்டப்பேரவையில் விரிவாக பேசியிருக்கிறேன். போதை கலாச்சாரத்தை ஒழித்து வருகிறோம். கூட்டணியில் இருக்கும் கட்சிகளை தோழமையாக பார்க்கும் கட்சிதான் தவெக. தங்களை மீறி யாரும் பேசக்கூடாது என நெருக்கடி கொடுக்கும் கட்சி நாங்கள் இல்லை. திருமாவளவனின் பேச்சை ஜனநாயகத்தின் வெளிப்பாடாகவே பார்க்கிறேன்,” என்று கூறினார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் ராஜ்மோகன்</p></div>
“தமிழகத்தில் 6 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகளை விரைந்து தொடங்குக” - அன்புமணி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in