“கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறப்புக்கு தொழிற்சாலை கழிவு காரணம் அல்ல” - அமைச்சர் ராஜீவ் விளக்கம்

அமைச்சர் ராஜீவ்

அமைச்சர் ராஜீவ்

Updated on
2 min read

சென்னை: எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் ஆயிரக்கணக்கான மீன்கள் இறந்து மிதப்பது குறித்து சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். இதற்குப் பதிலளித்துப் பேசிய சுற்றுச்சூழல் துறை அமைச்சர், "தண்ணீரில் ஆக்சிஜன் அளவு குறைந்ததே மீன்கள் இறப்பிற்கு முதன்மைக் காரணம்; இது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது” எனத் தெரிவித்தார்.

சட்டசபையில் அதிமுக சட்டமன்றக் குழு தலைவர் எடப்பாடி பழனிசாமி சிறப்பு கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார். அப்போது பேசுகையில், “எண்ணூர் முகத்துவாரத்தில் கொத்து கொத்தாக மீன்கள் இறந்து மிதக்கின்றன. கழிவுகள் ஆற்றில் கலப்பதால் மீன்கள் இறக்கின்றன. காட்டுக்குப்பம், நெல்லிக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அப்பகுதியில் உள்ள தொழிற்சாலை கழிவுகள் கொசஸ்தலை ஆற்றில் கலப்பதால், நீர் அடிக்கடி மஞ்சள் நிறத்தில் மாறுவதாக கூறப்படுகிறது. இதனால், மீனவர்கள் ஆர்ப்பட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். மீனவர்கள் வாழ்வாதாரத்தை பாதுகாக்க அரசு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து பாமக எம்எல்ஏ கணேஷ் பேசுகையில், கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதப்பது இது முதல்முறை அல்ல. பலமுறை இது போல நடந்துள்ளது. சுற்றுச்சூழலை பாதிக்கும் அனைத்து நிறுவனங்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு ஒரு விசாரணை ஆணையம் அமைக்க வேண்டும். இதை இப்படியே விடக்கூடாது” இவ்வாறு அவர் பேசினார்.

அதைத்தொடர்ந்து திமுக எம்எல்ஏ தங்கம் தென்னரசு, சென்னையை சுற்றியுள்ள பல பகுதிகள் சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாக இருக்கின்றன. வடசென்னை கொசஸ்தலை ஆறு மற்றும் அதன் முகத்துவாரப் பகுதிகளில், தொழிற்சாலைக் கழிவுகள் கலப்பதால் தொடர்ந்து மாசடைந்து வருகின்றன. ஆற்றில் மீன்கள் இறந்து மிதப்பது வாடிக்கையாகிவிட்டதால், அப்பகுதி மீனவர்களின் வாழ்வாதாரம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு காரணங்களால் கொசஸ்தலை ஆறு மாசடைகிறது. மீன்கள் இறந்து மிதக்கும் அளவுக்கு மாசு அதிகரித்து காணப்படுகிறது. இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கொசஸ்தலை ஆற்றுப் பகுதியைச் சூழலியல் மண்டலமாக அறிவித்து, அரசு உடனடியாகத் தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்ற துறை அமைச்சர் ராஜீவ் பேசுகையில், “ எண்ணூர் முகத்துவாரத்தில் மீன்கள் இறந்து கிடப்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. எண்ணூர் முகத்துவாரம், ரயில்வே பாலம் உள்ளிட்ட 5 இடங்களில் ஆய்வு மேற்கொண்டோம்.

எண்ணூர் முகத்துவாரத்தில் 2,150 கிலோ மீன்கள் இறந்து கிடந்தன. நீரில் ஆக்ஸிஜன் அளவு கடுமையாகக் குறைந்ததே மீன்கள் இறந்து மிதப்பதற்கு முக்கியக் காரணமாகும். மீன்கள் இறப்பு குறித்து குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு அறிக்கை பெறப்படும்.

மேலும், எண்ணூர் கொசஸ்தலை ஆற்றில் மீன்கள் இறந்து மிதந்ததற்கு தொழிற்சாலைக் கழிவுகள் காரணம் அல்ல. மனிதக் கழிவுகள் உள்பட கழிவு நீர் கலப்பு காரணமாக உயிரிழந்திருக்கலாம். இது குறித்து தண்ணீரும் ஆய்வுக்கு அனுப்பபட்டுள்ளது. இது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது. தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. முடிவுகள் தெரிந்தபிறகு இது குறித்து விளக்கம் தருகிறேன்.” இவ்வாறு அவர் கூறினார்.

<div class="paragraphs"><p>அமைச்சர் ராஜீவ் </p></div>
“திமுக எம்எல்ஏக்களுக்கு அரசு வழங்கும் கார் வேண்டாம்” - பேரவையில் உதயநிதி அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in