

அமைச்சர் ராஜகண்ணப்பன் | கோப்புப்படம்
ஒரு சிலர் காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு உயிரை வாங்குவதாக அமைச்சர் ஆர்.எஸ்.ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள கீரமங்கலத்தில் நேற்று முன்தினம் இரவு திமுக பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன் கலந்து கொண்டு பேசியதாவது: நான் வகிக்கும் வனத்துறையில் 108 பேர் ஐஎஃப்எஸ் அதிகாரிகள் உள்ளனர். அவர்களை மேய்ப்பதே பெரிய சிக்கலாக உள்ளது. பதவி உயர்வு கொடுத்து சிலரை மாவட்ட வன அலுவலர்களாக நியமித்து, ஒரு மாதிரி ஓட்டிக்கொண்டு இருக்கிறேன்.
திராவிட இயக்கத்தை வெல்ல இனிமேல் ஒருவன் பிறந்து தான் வர வேண்டும். 1967 வரை காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. அப்புறம் அவர்களால் வர முடிந்ததா? கருணாநிதி 110 இடங்களில் வென்றார். அப்போது, அவர் என்ன கூட்டணி ஆட்சி கொடுத்தாரா? காங்கிரஸ்காரர்கள் நம்மோடு இருந்தால் இருந்துவிட்டுப் போகட்டும்... வேண்டாம் என்று சொல்லவில்லை. சொன்னால் கோபித்துக் கொள்வார்கள். காங்கிரஸ் கட்சியில் ஒருசிலர் இருந்து கொண்டு உயிரை வாங்குகிறார்கள்.
நேற்றுக்கூட நானும் செல்வப்பெருந்தகையும் ஒரு நிகழ்ச்சியில் சந்தித்துக் கொண்டோம். என்ன செய்வது, கூட்டணியில் இருக்கிறார்கள் என்பதற்காக போட்டோவுக்கு போஸ் கொடுக்கிறோம். எந்த கூட்டணி என்றாலும் சரிதான். முதல்வர் ஸ்டாலின் சொல்வதை கேட்பது தான் நம் கொள்கை. தனியாக நிற்க வேண்டும் என்றாலும் ரெடி.
தேர்தல் வந்து என்ன கெட்டுப் போய் விட்டோம். மக்களவை உறுப்பினராக ப.சிதம்பரம் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு என்னானது என்று முதல்வர் ஒரு முறை என்னிடம் கேட்டார். நீங்கள் தான் நிறுத்தி வைக்கச் சொன்னீர்கள்; நிறுத்தி வைத்து விட்டேன் என்றேன். அதைக்கூட அவர் மறந்துவிட்டார். என்ன செய்வது? கூட்டணியில் இருக்கிறார்கள். ப.சிதம்பரமும் தற்போது நண்பராகி விட்டார். இவ்வாறு அவர் பேசினார்.