

அதிமுகவில் முன்கூட்டியே விருப்ப மனு வாங்குவது ஏன் என்பது குறித்து மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி கருத்து தெரிவித்தார்.
புதுக்கோட்டையில் நேற்று செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தமிழகத்துக்கு அடுத்தடுத்து வருவதாகச் கூறுகிறார்கள். தேர்தலில் அவர்கள் செலுத்தும் வைப்புத் தொகையைத் திரும்பப் பெற, அவர்கள் படையெடுத்து வந்துதான் ஆக வேண்டும். பிஹாரைப் போல தமிழகம் இருக்காது.
தமிழகத்துக்கு எந்த நிதியையும் கொடுக்க பிரதமரும், உள்துறை அமைச்சரும் வரப் போவதில்லை. இங்கிருந்து எடுத்து பிற மாநிலங்களுக்கு கொடுக்கத்தான் வருகிறார்கள். மருத்துவத் துறையில் சொந்த தொகுதியில் கூட உபகரணங்களை வாங்கிப் போடாதவர் முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர். ஆனால், திமுக ஆட்சியில் மருத்துவத் துறையில் பல விருதுகளைப் பெற்று சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.
முதல்வர் ஸ்டாலின் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். 2026 சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி அமோக வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைக்கும். அதிமுகவில் ஆள் இருக்கிறார்களா என்பதை பார்க்கவும், கட்சியை விட்டு யாரும் சென்று விடக்கூடாது என்பதற்காகவுமே தேர்தலில் போட்டியிடுவதற்கான விருப்ப மனுவை அவர்கள் முன்கூட்டியே வாங்குகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.