

துணை முதல்வர் உதயநிதி இன்னும் நீராவி இன்ஜின் காலத்திலேயே இருக்கிறார். அவர் இன்னும் அப்டேட் ஆகவே இல்லை என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
அதிமுகவில் விருப்ப மனு விநியோகம், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. இதில் பங்கேற்று விருப்ப மனு பெற்ற முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார், பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இன்றைய விருப்ப மனு விநியோகத்தில் கட்சியினரின் எழுச்சியை பார்க்கும் போதே, அதிமுக இமாலய வெற்றி பெற்று மீண்டும் ஆட்சிக்கு வரப்போவது உறுதியாகத் தெரிகிறது.
அதிமுக இன்ஜின் இல்லாத கார் என்று துணை முதல்வர் உதயநிதி பேசியிருக்கிறார். இன்னும் நீராவி எஞ்சின், கரி எஞ்சின் காலத்திலேயே இருக்கிறார். இப்போது புல்லட் ரயில் வந்து விட்டது. இன்னும் கூட்ஸ் ரயில் காலத்தில் இருக்கிறார். நீராவி ரயிலுக்குத்தான் இன்ஜின் தேவை. புல்லட் ரயிலுக்கு எதற்கு? அதிமுக புல்லட் வேகத்தில் சென்று கொண்டிருக்கும் கட்சி. உதயநிதி இன்னும் அப்டேட் ஆகவே இல்லை. அப்டேட் இல்லாத உதயநிதி அவரை அவரே கேவலப்படுத்திக் கொள்கிறார். திமுக ஆடிய ஆட்டத்துக்கு 3 மாதங்கள் கழித்து தேர்தலில் பதில் கிடைக்கும்.
கூட்டணியில் எல்லா கட்சிகளும் கூடுதல் தொகுதிகளை கேட்கத்தான் செய்வார்கள். அதில் எந்த தவறும் இல்லை ஆனால் யாருக்கு என்ன பலம் என்பதைப் பொறுத்து தொகுதிகள் ஒதுக்கீடு பற்றி அதிமுக தலைமை முடிவு செய்யும். நான் 25 ஆண்டுகளாக ராயபுரத்தில் தான் போட்டியிடுகிறேன். 25 ஆண்டுகள் வெற்றியைக் கொடுத்தவர்கள்.
நான் எம்எல்ஏவாக இருக்கும் போது தொகுதி எப்படி இருந்தது, இப்போது எப்படி இருக்கிறது என்பதை மக்கள் ஒப்பிட்டு பார்ப்பார்கள். கண்டிப்பாக எனக்கு வெற்றி கிடைக்கும். ராயபுரம் தொகுதி மக்களை விட்டு எந்த காலத்திலும் நான் விலகிச்செல்ல மாட்டேன்.
இன்று ஸ்டாலினை வழிநடத்துபவர்கள் எல்லோருமே அதிமுகவிலிருந்து சென்றவர்கள் தான். அதிமுகவில் இருந்து திமுகவிற்கு சென்று வேட்டி மாற்றிய ரகுபதிக்கு, எங்கள் இயக்கத்தை விமர்சிக்க எந்த தகுதியும் இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.